Sunday, February 8, 2009

கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து உண்ணாநிலைப்போராட்டம்


ஈழத்தமிழர் படுகொலையைக்கண்டித்து பல்வேறு அமைப்புகளும் அரசியல்கட்சிகளும் போராடி வரும் நிலையில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து கத்தோலிக்க திருச்சபையின் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது.

தென் தமிழகமான தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (08.02.2009) காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் வாயில் காந்தி சிலை முன்பாக கத்தோலிக்க ஆயர் இல்ல மறைமாவட்ட முதன்மைக்குரு பேரட்திரு.ஆசுவால்ட் அடிகளார் தலைமையில் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மறைதிரு. சுந்தரிமைந்தன் அவர்கள் கவனித்தார்.

நிகழ்வில் சிறப்புரையாக பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஈழ நிலைமைகளை தெளிவுபட விளக்கினார். ஆதித்தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் க.கண்ணன் , இளைஞரணி செயலாளர் வெ.மனோகர் , பெரியார் திக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு , தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு , வழக்கறிஞர் அதிசயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உண்ணாநிலைப்போராட்டத்தினை வாழ்த்தி இந்திய - சிங்கள கூட்டு ஈழத்தமிழின அழிப்பைக்கண்டித்து பேசினார்கள்.

இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றது.





Saturday, February 7, 2009

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக்கண்டித்து கருப்புக்கொடி பேரணி : ஆர்.நல்லகண்ணு பங்கேற்பு

தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஈழத்தமிழர் படுகொலைக்கு துணைநிற்கும் இந்திய அரசைக்கண்டித்து ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி பேரணி தமிழீழ தேசியத்தலைவரின் படங்களையுடைய பதாகைகளை ஏந்தியபடி எழுச்சியொடு நடைபெற்றது.

இப்பேரணிக்கான ஏற்பாட்டினை தமிழர் தேசிய இயக்க தமிழ்நேயன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பாலவிநாயகர் கோவில் முன்பு துவங்கிய பேரணி பெரும் எழுச்சியோடு தொடங்கி தந்தி நிலையம் முன்பாக நிறைவடைந்து கண்டனக்கூட்டம் நடைபெற்றது.

பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் மற்றும் ஈகி தூத்துக்குடி முத்துக்குமரன் அவர்களின் படத்தினையும் சட்டையில் குத்திக்கொண்டும் , கைகளில் "தமிழீழம் மலரும்" என்று தலைவரின் படத்துடன் எழுதப்பெற்ற பதாகைகளையும் ஏந்தியபடி வந்தனர். அனைவரும் உணர்ச்சி பொங்க தமிழீழம மலரட்டும் விடுதலைப்புலிகள் வெல்லட்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர்.இந்திய காங்கிரசு மற்றும் திமுக , அதிமுக போன்ற தமிழர் விரோத கட்சிகளை கண்டித்தும் முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர்.

இப்பேரணியில் இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவையின் வே.மனோகர் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன் , மீனவர் கழக ஆன்டன் கோமசு , வழக்கறிஞர் சங்க தலைவர் டி.பிரபு , வழக்கறிஞர் அதிசயக்குமார் , வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் , மதிமுக ஜோயல் , மோகன்ராசு (இ.பொ.க) , தமிழக இளைஞர் கழக தமிழரசன் , வெனி.இளங்குமரன் , நக்கீரன் , தமிழ்மாந்தன் , செந்தமிழ்பாண்டியன்(வி.சி) மற்றும் பலர் தங்கள் கண்டன உரையினை பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தூத்துக்குடியில் வாழ்ந்து வரும் சிலோன் குடியிருப்பு மக்கள் திரளாக குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கட்சிபாகுபாடின்றி அனைத்து மக்களும் தமிழுணர்வுடன் கலந்துகொண்டனர். இலங்கைத்தமிழர் என்றுக் கூறிவரும் நிலையில் எவ்வித வேறுபாடு இன்றி தூத்துக்குடியில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டது முத்துமாநகரில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.





Monday, February 2, 2009

காணொளி:வீரத்தமிழன் முத்துக்குமரனுக்கு தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி

தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் மாவட்டமான தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி நடைபெற்றது.

அதன் காணொளி :




http://tubesea.com//play.php?vid=516

தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழத்தமிழன்

தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழத்தமிழன் PDF Print E-mail
Monday, 02 February 2009
எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவ நண்பர்களே !

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு,
உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லரியாலும் அடித்து நூற்ருயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை,

கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.
மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா ! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.

தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை.இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துகுமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.

சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள்.ஆனால் நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா.

இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாக பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!

உங்கள் கைகள் தான் கறை படியாதவை
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்

ஓயாது ஒலியுங்கள்
நீங்கள் ஓய்ந்தால்
நாங்கள் வீழ்வது மட்டுமல்ல
நாளை இருக்கவும் மாட்டோம்

இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.

கந்தக காற்றதனே சொந்தமென ஆகி
கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி
வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்
வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம் எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழர் சார்பில்
நான்


http://tamiloosai.com/index.php?option=com_content&task=view&id=10061&Itemid=68

அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு ஏதிலிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்

அவசரச் செய்தி :
உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது
காவல்துறையினர் தாக்குதல்


சென்னை, 2-2-09.


ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர்.

செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போது, "நீங்கள் விடுதலைப் புலிகளா?" என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இது குறித்த கண்டனங்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமால் இச்செய்திகளை கைபேசி, மின்னஞ்சல் மூலமாக அனுப்பி செங்கல்பட்டு களத்திற்கு சென்று நேரில் உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி : save-tamils@googlegroups.com

Sunday, February 1, 2009

வீரத்தமிழன் முத்துக்குமரனுக்கு தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி

வீரத்தமிழன் முத்துக்குமரனுக்கு தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி


தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் மாவட்டமான தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியிலுள்ள அனைத்து அமைப்புகளையும் , சங்கங்களையும் , கட்சிகளையும் தமிழுணர்வாளர்களையும் தூத்துக்குடி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பா.பிரபாகரன் ஒருங்கிணைத்து தலைமையேற்று ஈகி முத்துக்குமரன் வீரவணக்க அமைதி பேரணியை நடத்தினார்.

பேரணிக்கு காவல் ஆய்வாளர்கள் மறுப்பு தெரிவித்த பொழுது மனம் தளராமல் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தமிழரசன் காவல்துறையின் உயரதிகாரிகளை சந்தித்து பேரணிக்கான அனுமதியினை பெற்றார். இப்பேரணி ஏற்பாட்டினை ஆதித்தமிழர் பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி , தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து செய்திருந்தனர்.

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் முன்பு நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் , குருசு பர்னாந்து சிலை , வடக்கு ரத வீதி வழியாக 6 மணியளவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பின்னர் கலந்து கொண்ட அனைத்து அமைப்பினரும் தங்கள் வீரவணக்கத்தினை செலுத்தி ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் க.கண்ணன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன் , அகில இந்திய மீனவர் சங்கத்தின் அன்டன் கோமசு , தமிழக-புதுவை மீனவர் கூட்டமைப்பின் ஜான் பி,இராயன் , கிருத்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் பணி.ஜார்ஜ் வில்பிரட் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சீனிவாசன் , இந்திய பொதுவுடைமைக்கட்சியின் மோகன்ராஜ் , தமிழ்நாடு வணிகர் சங்கபேரவையின் பொன் தனசேகரன் , புதிய தமிழக கட்சியின் லிங்கராஜ் , ஆதித்தமிழர் பேரவையின் இளைஞரணியினைச் சேர்ந்த மனோகரன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக க.மதன் , அறிவுபித்தன் , நெல்லை சி.ஆ.காசிராசன் , மகாராசா, கோ.அ.குமார் , வெ.பால்ராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , தமிழர்தேசிய இயக்க தமிழ்மாறன் , தமிழ்நேயன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் சுஜித் , தமிழ்கனல் மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

கொளத்தூரில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கடையடைப்பு பேரணி




சேலம் கொளத்தூரில் இன்று ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கடையடைப்பு மற்றும் தமிழின உணர்வாளர்களின் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

தமிழுணர்வாளர்கள் அனைவரும் கொளத்தூர் சோதனைச்சாவடியில் ஆரம்பித்து காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி பேரணியாக, கொளத்தூர் வடக்கு இராஜ வீதி , தெற்கு இராஜ வீதி வழியாக உணர்ச்சிபூர்வமாக முழக்கமிட்டுக்கொண்டே கொளத்தூர் பேருந்து நிலையத்தின் முன்பு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன் வீரத்தமிழன் முத்துக்குமரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக்கட்சிகளும், வியாபாரிகள், ஓட்டுநர் சங்க பொறுப்பாளர்கள் இந்திய அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டித்தும் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் பொதுமக்களுக்கு எமக்காகவும் குரல்கொடுங்களேன் குறுந்தகடு இலவசமாக வழங்கப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றது.