Monday, December 24, 2007

அரசியல் பிழைப்பு அயோக்கியன் பிழைப்பு

அரசியல் பிழைப்பு அயோக்கியன் பிழைப்பு என்றார் தந்தை பெரியார்....
தனது பதவி சுயநலத்துக்காக தமிழனின் நிலையை கண்டு கொள்ளாமல் தில்லிக்கு மண்டியிடும் இவர்களா தமிழர் பாதுகாவலர், தமிழர் தலைவர்..
ஏனிந்த மாற்றம் பாதுகாவலரே(!!!??) ?

Sunday, December 16, 2007

தூத்துக்குடியில் தலித் மக்களை இழிவுபடுத்திய குசராத் முதல்வர் பயங்கரவாதி நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில்
தலித் மக்களை இழிவுபடுத்திய குசராத் முதல்வர்
பயங்கரவாதி நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனித மலத்தை மனிதன் அள்ளுவது கடவுளுக்கு செய்யும் புண்ணியம் , அவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என சாதி திமிரோடு பேசிய குசராத் முதல்வர் பயங்கரவாதி நரேந்திர மோடியை கண்டித்து 10.12.2007 மாலை 7.00 மணி அளவில் தூத்துக்குடி தாளமுத்துநகர் முதன்மை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான பொறிஞர் சி.அம்புரோசு தலைமை வகித்தார். தூத்துக்குடி நகர செயலாளர் பால்.அறிவழகன் முன்னிலை வகித்தார், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் தமிழரசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார், தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி விளக்கவுரையாற்றினார். மாவட்டச்செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், மாவட்டத்துணைத்தலைவர் வே.பால்ராசு, நகரத்தலைவர் கோ.அ.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை பொ.பொன்ராசு, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் பீட்டர் ஆகியோர் கண்டன உரையினை பதிவு செய்தனர். நிகழ்வில் , தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ஆ.காசிராசன் , நகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன், வ.அகரன் , அறிவுபித்தன், மனித உரிமை பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் வழக்கறிஞர் இராமச்சந்திரன் , புரட்சிப்புலிகள் பொறுப்பாளர் வழக்கறிஞர் கலைமுருகன் , விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் ஆ.ஆறுமுக நயினார் மற்றும் பெரியார் தி.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


செய்தி

வ.அகரன்

விடுதலை சிறுத்தைகளின் முற்போக்கு......


விடுதலை சிறுத்தைகளின் முற்போக்கு......
இவர் மொட்டை போடுவது தனது உறவினர்கள் இறந்ததற்கோ, கோவிலுக்கோ இல்லை.... திசம்பர் 6 அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளில் அம்பேத்கர் சிலை முன்பு மொட்டை போட்ட விடுதலை சிறுத்தை யின் பொறுப்பாளர்....

இதுதான் விடுதலை சிறுத்தைகளின் முற்போக்கா?

விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் துணை நிற்கின்றனர்.

எங்கே செல்லும் இந்த பாதை..




Thursday, December 13, 2007

பெரியார் தி.க.வின் கொடி வரலாறு

தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை திராவிடர் கழகம் நீர்த்து போக செய்துவிட்ட பின்னர் “ பெரியார் பாசறை “ தூத்துக்குடியில் துவக்கப்பட்டது. பால்.பிரபாகரன் அவர்களை அமைப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாசறை தூத்துக்குடி & விருதுநகர் மாவட்டங்களில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை வளர்த்தது.
தந்தை பெரியாரின் கொள்கைகள் முழுமையும் செயல் வடிவம் காண எந்த பலமும் இல்லாமல் தந்தை பெரியாரின் கொள்கை பலத்தை நம்பியே பாசறை நடை போட்டது. 1996 இல் “பெரியார் பாசறை” தென்மாவட்டங்களில் தொடங்கி பரப்புரை செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.
“பெரியார் பாசறை”- பெரியார் படத்தை துண்டறிக்கையில் போடுகிறது, கருப்புச்சட்டை அணிகிறார்கள்... திராவிடர் கழகத்திற்கும் பாசறைக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதால் திராவிடர்கழகத்திலிருந்து தனித்து காண்பிக்க தனியாக கொடி வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திராவிடர் கழக கொடி சொல்லும் அதே கருத்தை சொல்ல வேண்டும் ஆனால் வேறுபாடும் தெரிய வேண்டும் என்பதால். கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம் கொண்ட கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.பாசறை தோழர்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
அந்த கொடிக்கான விளக்கத்தை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அறிவித்தார். அதில் கருப்பு நிறம் - பழமைவாதம் மூடநம்பிக்கை உள்ள சமூகத்தையும், சிகப்பு நட்சத்திரம் - பகுத்தறிவு புரட்சியாக நடுவில் இருந்து பெரியார் சொன்ன ஐந்து கொள்கைகளாக விரிந்து அந்த கருப்பு சிகப்பாக மாறும் என்பதே ஐமுனை நட்சத்திரம்.
முனை 1: சாதி ஒழிப்பு
முனை 2: மதமூடநம்பிக்கை ஒழிப்பு
முனை 3: பெண்ணுரிமை
முனை 4: உலக தமிழருக்கான நலன்
முனை 5: தமிழருக்கான நாடு
என கொடிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது.

பாசறையின் தூண்களாய் விளங்கிய மறைந்த பெரியவர் இராம.கணேசனார், செ.பால்துரை, சு.இலட்சுமணன், ந.முருகேசன், க.மதன் & வே.பால்ராசு போன்ற தோழர்கள் கொடியினை தென் மாவட்டங்களில் பறக்க உதவினர். முதல் கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் பால்.பிரபாகரன் வீட்டில் ஏற்றப்பட்டது. இரண்டாவது கொடி மறைந்த பெரியவர் இராம.கணேசனார் இல்லத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. பெரியார் பாசறை-தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமான போது உறுப்பாய் விளக்கியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமாக பேசுகின்ற போதே பாசறை கொடியே த.பெ.தி.க கொடியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மூன்று பெரிய அமைப்புகள் சேரும் போது. அந்த பெரிய அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விடுதலை .இராசேந்திரன் பொதுச்செயலாளராக விளங்கிய பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டு கோவை.கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளராக விளங்கிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் கொடியான கருப்பு சிகப்பு கருப்பு கொடியானது அமைப்பின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆம் கருப்பு சிகப்பு கருப்பு தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியாக மாறியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளைஞர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி தொடர் போராட்டங்களால் தமிழகத்தை தன் பக்கம் பார்க்க வைத்தது. அப்போது கருப்பு சிகப்பு கருப்பு கொடியினை அரசியல் கட்சி கொடியாக மக்கள் பார்க்கத்தொடங்கினர். ஒரு அரசியல் கட்சி (மதிமுக) கொடியா? என கேட்கத்தொடங்கினர். இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக்குழு கூடி விவாதித்து இயக்கத்தின் பெயரை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியும் இயக்கத்தின் கொடியினை மாற்ற முடிவு செய்து மாவட்ட கழகங்களுக்கு வடிவமைத்து வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கொடியினை மாற்ற வேண்டாம் என்றும் தமிழகம் முழுமையும் மாற்றி ஆக வேண்டும் என விரும்பினால் பெரியார் பாசறையின் கொடியை (கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம்) பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மாநில ஆட்சிக்குழு பரிசீலித்து பெரியார் பாசறை கொடியினை பெரியார் திராவிடர் கழகக்கொடியாக ஏற்றுக்கொண்டது.
கொடியினை முறையாக ஈரோட்டில் சென்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக மாநாடான சாதி ஒழிக்க பெரியார் சட்டம் எரித்த 50 ஆண்டு நிறைவு சாதி ஒழிப்பு மாநாட்டில் கொடியினை ஏற்றி வைக்கும் வாய்ப்பை கொடியினை உருவாக்கிய பெரியார் பாசறை அமைப்பாளரும், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பால்.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கியது பெரியார் தி.க. தலைமை. கொடியினை உயர்த்தி வைத்து கொடி குறித்து நெகிழ்ந்து அவர் ஆற்றிய உரையினை "பெரியார் முழக்கம்" வெளியிட்டது. ஆம் அவர் உரையில் குறிப்பிட்டதை போல் பாசறை கொடி தமிழ் நாடு முழுமையும் பறக்குமா? என்ற கேள்விக்கு விடைகிடைத்தது. அந்த கேள்வியோடு தூத்துக்குடி நகரத்தில் பாசறை கொடியேந்தி வந்த மாவீரன் மறைந்த பெரியவர் இராம.கணேசனாருக்கு மட்டும் பதில் தெரியவில்லை பாசறை கொடி தமிழகத்தில் எங்கும் பறக்கிறது என்ற உண்மை.

Wednesday, December 12, 2007

மானமிகு தலைவருக்கு கருப்புச்சட்டைக்காரனின் மனம் திறந்த மடல்

மானமிகு தலைவருக்கு கருப்புச்சட்டைக்காரனின் மனம் திறந்த மடல்

மதிப்பிற்குரிய மானமிகு தலைவரே,
வணக்கம். உங்களின் வீராப்புமிக்க அறிக்கைகளை படித்து நெகிழ்ந்து போனேன். மதசார்பற்ற அணியின் அச்சாணியே தாங்கள்தான் என்பதும், அன்னை தி.மு.க வின் கொள்கை பரப்பும் செயலாளர் என்பதுவும் தமிழகம் 2 ஆண்டுகளுக்கு மேலாக அறிந்து வந்து கொண்டிருக்கிறது. என்னதான் பெரியார் சொன்னாலும் கேட்காத தமிழக மக்கள் உங்களின் வார்த்தையினை கேட்டு பச்சை தமிழச்சியை! உங்கள் பாசமுள்ள சகோதரியை தமிழக முதல்வராக்கியது உங்களுக்கு தமிழகத்திலுள்ள மக்கள் செல்வாக்கையே காட்டுகிறது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டம் தமிழகத்தில் வந்திட தாங்கள் சொன்னால் யாரும் கேட்பது இல்லையே ஏன்? இந்த மக்கள் செல்வாக்கை வைத்து தாங்கள் மந்திரியாக - ஆசைப்படுகிறார்களாம் உரத்தநாடு தோழர்கள் ? இது உண்மையா? இல்லை கொள்கை தடுக்கும் என்கின்றீர்களா? கண்டிப்பாக இராது.
பழைய பச்சை அட்டை குடியரசில் பெரியார் அன்றே சொல்லியுள்ளார் "குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால் திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கும் தோழர்கள் மந்திரிகளாக பவணிவருவார்கள்" என்று சொல்லிவிடுங்கள் உங்களை யார் எதிர்த்து கேட்பார்கள்? குடியரசு இதழ் அதுவும் பழைய பச்சை அட்டை குடியரசு தமிழ்நாட்டில் யாரிடம் உண்டு. எல்லாவற்றையும் விடுதலையில் விளம்பரபடுத்தி தாங்கள்தான் வாங்கிவிட்டீர்களே பின் எப்படி இருக்கும். கவலை வேண்டாம். தேர்தல் கட்சிகள் நடத்தும் கலந்தாய்வில் முத்தாய்ப்பாய் உங்கள் முகம் தெரிகிறது. சமுதாய கட்சிக்கு அங்கு என்ன வேலை ? என எனக்கு கேட்க தோன்றுகிறதா? இல்லையே. செயலை செய்து முடிப்பதற்கு முன்பே பாராட்டி பட்டம் எல்லாம் தருகின்றீர்களே. தாங்கள் பட்டம் வழங்கும் நிறுவனமா நடத்துகின்றீர்கள்? 69% இடஒதுக்கீட்டிற்கு 31(C) சட்டம் தந்து இந்தியாவிற்கே வழிகாட்டிய தலைவர் என தாங்களுக்கு அன்று சுவரொட்டியெல்லாம் ஒட்டினேன். அந்த 69% இடஒதுக்கீடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லையாமே?. 31(C) சட்டம் என்னானது.
தாங்கள் கொண்டுவந்த சட்டம் என்பதால் தி.மு.க காரர்கள் செயல்படுத்தவில்லை போலும். இப்பொழுதுதான் உங்கள் அன்பு சகோதரி ஆட்சியாயிற்றே இந்தாண்டே 69% இட ஒதுக்கீடு கொண்டுவர சொல்லுங்கள். சமூக நீதி காத்த வீராங்கனையல்லவா? செய்வார்? தாங்கள் நம்புகின்றீர்களோ என்னவோ? நான் நம்புகிறேன் ஏனெனில் சிந்தனைச்செல்வி ஆட்சிக்கு வந்தால் பெரியார் பணி எல்லாம் முடிந்துவிடும் இனி நமக்கு வேலை இல்லை. என 1995 இல் திருச்சி பெரியார் மாளிகையில் அன்றைய துணைப்பொதுச்செயலாளரும், இன்றைய பொருளாளரும் உங்கள் வகுப்பறை தோழருமான அந்த நபர் பேசியதை நான் மறக்கவில்லை. வழக்கறிஞர்-படிப்பை முடித்தவர், நிறைய அரசியல் தெரிந்தவர் அதுவும் உங்கள் நண்பர் பேசியது தவறாக இருக்குமா? அப்படி தவறாக பேசியிருந்தால் தாங்கள்தான் கண்டித்திருப்பீர்களே!
தாங்களிடம் ஒரு முக்கிய விடயம் முன்பு விடுதலை உண்மையில் விளம்பரமாகும் குடும்ப நலநிதி, திராவிடன் நலநிதி இரண்டும் கழக நிறுவனம் இல்லையாமே?! தாங்கள் பினாமி பெயரில் நடத்துகின்றீர்களாமே, கணினி மென்பொருள் நிறுவனம் பெரியார் திடலிலிருந்து அடையாறுக்கு உங்கள் மகனின் நிறுவனமாக மாறிவிட்டதாமே? உண்மையா? பணத்திற்காக கொள்கையை விட்டுவிடுவீர்களாமே. அதனால்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொள்கையை மட்டும் எடுத்துக்கொண்டு மக்கள் பணி செய்கிறது என பாமரன் கூட கூறுகின்றானே.
பணம் , புகழ் , பாராட்டிற்கு மயங்காத பெரியார் சீடர்கள் பலர் இருக்க இவற்றிற்கு மயங்கி வாய் உளருவது ஏன்? நிரந்தர முதல்வர் 5 லட்சம் ரூபாய் கொடுத்த போது " உயிருள்ளவரை நன்றி மறக்க மாட்டேன் " என சொன்னது ஏன்? தங்கக்கடற்கரை சாலையில் கப்பல் வீடு தந்ததற்கு "சமூகநீதி காத்த வீராங்கனை"என்ற பட்டம் தந்தீர்கள். பெரியார் விருது கொடுத்து உங்களை கௌரவித்த போது பாப்பாத்தியின் உருவில் பெரியாரையே பார்த்தீர்களாமே. ஆத்திகர்கள் கூட இப்படி உளறியது கிடையாது. ஏன்? எதற்கு?எப்படி? என பெரியார் கேள்வி கேட்டு பரிசோதிக்க சொன்னார். நானும் ஏன்? எதற்கு?எப்படி? பார்ப்பன பெண்ணிடம் பெரியாரை கண்டார் என கேட்டுப்பார்க்கிறேன் விடை தெரியவில்லை. கடந்த 1999 முதல் தங்களது தொடர் அறிக்கைகள் எல்லாம் புத்தகமாக வந்துள்ளதாம் திடல் தோழர்கள் சொன்னார்கள். நான் இரண்டொரு அறிக்கையினை மட்டுமே விடுதலையில் படித்தேன். அது எல்லாம் எவ்வளவு கருத்தாளம் கொண்டது.பெரியார் பிறந்த நாள் விழா 2000ம் வருடம் நடத்திய பொழுது பெரியார் விழா 2000 என பெயரிட்டு பெண்ணுரிமை காக்கும் புண்ணியவதிதான் தலைமை ஏற்க வேண்டும் என தாங்கள் முடிவு செய்தது எவ்வளவு பொருத்தம்.
இந்திய அரசு பணி அலுவலர் திருமதி.சந்திரலேகா முகத்தில் திராவகம் வீசியது, முன்னாள் தமிழக பெண் அமைச்சர் சுப்புலட்சுமியை கைது செய்து கொடுமைப்படுத்தி பெண்கள் நலம் காத்த நங்கையல்லவா? அது போகட்டும் பெரியார் விழா முடிந்த மறுநாளே, அந்த சனியன் தொலைய திருநள்ளாரில் சனியன் கோவிலில் பூசை செய்தாராமே உங்கள் சகோதரி, பத்திரிக்கையில் செய்திபடித்தேன். அந்த பூசை பொருள் எல்லாம் உரத்தநாடு பகுத்தறிவாளர்கள் வாங்கி கொடுத்ததும், கருப்புப்பூனை படை பாதுகாப்பு இதற்கு சரியல்ல என்று கருதி தாங்கள் உரத்த நாடு கருஞ்சிறுத்தை படை பாதுகாப்பை கொடுத்தீர்களாமே!!!? இதை எல்லாம் பகுத்தறிவு என்று எப்படி சொல்கின்றீர்கள்.
ஒருமுறை சென்னையில் திரு.மு.கருணாநிதி அவர்கள் பெரியார் முன்னிலையில் பேசும் போது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என சொன்னபோது தந்தை பெரியார் தனது கை தடியால் மேடையில் தட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம் ... அன்று அவருக்கு (பெரியார்) கோபம் வந்தது. இன்று நீங்கள் செய்யும் கேவலமான ஈன செயலை கண்டால் பெரியார் தனது கைத்தடியால் உங்களையல்லவா ஓட ஒட அடித்திருப்பார்? பெரியாரை கேவலப்படுத்த மானமிகு தலைவரே பெரியார் தொண்டர்களையா அடகு வைக்க வேண்டும். தன்னலம் பாராது தனது சொந்த பணத்தை கொண்டு பெரியார் பணிமுடிக்கும் பெரியார் தொண்டர்கள் சேவையை தாங்கள் போன்றோர் செய்யும் கெடுமதி செயலால் கேவலப்படுத்தாதீர்கள். பலரும் தலைமை ஏற்க இயலாது. அது அதிகார வரம்பை மீறும் செயல் என்பதால் தலைவர் என ஒருவரின் பின் தொடர்வது வழக்கம். அந்த தலைமையே தடம் மாறினால் அவரை தூக்கி எறிவதும் தொண்டனின் கடமை. தாங்கள் தடம் மாறுகின்றீர்கள் என்பதை மட்டும் அறிவு நாணயத்தோடு சொல்ல விரும்புகிறேன்.
மானுட நேயம்தான் பெரியாரின் கொள்கை. இந்த மாபெரும் பணிக்காக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஓய்வு அறியாது சுற்றி பணியாற்றி , தன் வாழ்வில் சுகத்தைவிட துக்கங்களையே சந்தித்த மாபெரும் தலைவனின் பெயரில் வியாபாரம் செய்யும் பார்ப்பன தொண்டர் மானமிகுவே தாங்களிடம் சேவை என்பது தேவை என ஆகிவிட்டதே ஏன். உயர்நிலை பதவி முதல் கடைநிலை பதவி வரை எல்லாவற்றிற்கும் தமிழன் வர வேண்டும் என சொல்லும் தாங்கள் தமிழர்களை ஆட்சி செய்ய மட்டும் ஒரு பாப்பாத்தி வர வேண்டும் என துடிப்பதன் காரணமென்ன? அந்த கன்னட பாப்பாத்தி திடல் நாயகர் தாங்களுடன் கைகுலுக்கி கொண்டதால் சூத்திரச்சியாகிவிட்டாரா? அப்படியானால் காஞ்சிமடம் சென்று , பாத பூசை செய்து தாங்கள் பார்ப்பானாக மாறிவிடமுடியுமா? பார்ப்பான் என்னிலையிலும் தன் குணத்தை விட்டுக்கொடுக்கமாட்டான் என்று பல மேடைகளில் பேசினீர்களே. பார்ப்பாத்தி மட்டும் விட்டுக்கொடுப்பாளா?
குருவாயூர் கோவிலுக்கு யயனை குட்டி கொடுப்பதுவும், அதனை பராமரிக்க லட்சங்கள் பலகொடுப்பதும்தான் பகுத்தறிவு என்கிறதா திடல் கூட்டம்? இதனை கண்டித்து விடுதலையில் ஒருவரி கூட எழுத இயலவில்லையே ஏன்? இதுதான் பார்ப்பன விசுவாசமா? தமிழகத்தில் எல்லா குக்கிராமங்களிலும் பெரியார் கொள்கை பரவி விட்டதாக சொல்லி தில்லியிலும் , அமெரிக்காவிலும் முகாமிட்டு பெரியார் பணி செய்யும் தாங்கள்தான் உண்மையான பெரியார் தொண்டர்! பெரியார் எழுதிய பாதி நூல்களை பதிப்பு இல்லாமல் செய்துவிட்டீர்கள். பெரியார் என்னும் சொல்லை அரசியலில் வியாபாரமாக்குவார்கள், தாங்களோ அவரையே வியாபாரமாக்கி வெற்றிக்கொண்டுவிட்டீர்கள். டர்பன் மாநாட்டில் சாதியையும்-இன ஒதுக்கல் போன்று விவாதிக்க வேண்டும் ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் திரண்டு தனது கண்டனத்தை இந்திய அரசிற்கு தெரிவித்தது தாங்கள் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டீர்களே ஏன்? போராட களம் இறங்கவில்லை? , அன்பு சகோதரிகள் உங்கள் புதிய பார்ப்பனக்கூட்டாளிகள் கோபித்துக்கொள்வார்கள் என்பதற்காகவா போராட்ட அறிவிப்பு ஏதுமில்லை? தி.மு.க ஆட்சியால் விலைவாசி உயர்வை கண்டித்து வெகுண்டு எழுந்தீர்களே! இப்பொழுது நியாய விலைக்கடையில் மண்ணெண்ணையை மறந்துவிட்டார்கள். அரிசி 12 கிலோ என பல ஊர்களில் வழங்குகிறார்களே இது பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்?
வல்லம் பொறியியல் கல்லூரி, வளாகம் , ஊறுகாய் , பப்படம் , அப்பளம், மாடு வளர்ப்பு மையம் என மக்களுக்கு தொண்டு செய்வதாக சொல்லி கனடா நாட்டு உதவி பெற்று அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் நடத்துகின்றீர்களாமே உண்மையா? சாதியில்லை என சொல்லும் திராவிடர்கழகத்தில் கோட்டூர் சின்னையாபுரத்து சாதி சங்க தலைவர் மதுரைக்காரர் தென்மாவட்ட பிரச்சார செயற்குழுவிற்கு தலைவராமே!? என்னவாயிற்று சாதிமறுப்பு கொள்கை? சாதிமறுப்பை, சாதியிடமே சரணடைய வைத்துவிட்டீர்களே இது உங்களின் மகத்தான சாதனைதான். " தோழர் வெண்மணியை திடலில் வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்து கேவலப்படுத்தி பெரியார் சொன்ன பெண்ணுரிமையை பெரியார் திடலிலேயே சிறை வைத்துவிட்டீர்களே...?
பெரியார் சொன்ன சாதிமறுப்பு கொள்கை கனவாகிவிட்டது. பெண்ணுரிமை, பேசாமடந்தையாகிவிட்டது பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பனரின் பாதத்தில் மண்டியிடுகின்றது. பிரச்சார நிறுவனமோ கல்வியை வியாபாரமாக்கி பணம் பார்க்கிறது. பெரியார் சொன்ன சிக்கனம். இன்று குளிர்சாதன அறையில் மதிமயங்கிவிட்டது. மாற்று கட்சியின் ஊதுகுழலாய், ஏவல் நாயாக கருப்புச்சட்டை தோழனை மாற்றி காட்டிய மானமிகுவே உங்கள் போன்று இதுவரை பார்ப்பனீயத்திற்கு காவடி தூக்கிய அடிவருடிகளை தமிழகம் கண்டிருக்காது. கொள்கை எல்லாம் காற்றில் பறக்க அமெரிக்காவிற்கு விமானத்தில் பறக்கும் பார்ப்பன விசுவாசியே பெரியார் கொள்கை காத்திட புறப்பட்ட வீரர்கள் தன்னலம் கருதா பெரியார் பணி செய்யும் தோழர்கள் கைகோர்த்து உருவாக்கியுள்ள " தந்தை பெரியார் திராவிடர் கழகம்" பெரியாரின் பணி முடித்தே தீரும். அதுவும் அணு அளவு கூட கொள்கை பிறளாது. அன்று மானமிகு தலைவரே உங்களை பெரியார் கரும்படை மன்னிக்காது. தமிழகம் , ஒடுக்கப்பட்டோர் என வரிசையாய் பெரியாரின் படைகலன்கள் உங்கள் முகத்திரையினை கிழிக்கும். அதுவரைதான் உங்கள் கொட்டம். "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" அணிவகுக்கிறது. துரோகிகளே உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். எதிரிகளையும், துரோகிகளையும் தனியே நின்று பெரியார் கரும்படை வெல்லும்.

அழியட்டும் துரோக கும்பல்
அமையட்டும் பெரியார் காலத்து தமிழகம்


- தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோன்றிய பின்பு 2002 இல் மானமிகு வீரமணிக்கு தூத்துக்குடி பெரியார் பாசறை தோழர்கள் அனுப்பிய மடல்.


செய்தி: அகரன்

Wednesday, December 5, 2007

பெரியார் தி.க

பெரியாரின் கொள்கைகளை கைவிட்டுவிட்ட வீரமணி தி.க. வால் வெளியேற்றப்பட்ட பெரியாரின் கொள்கைவாதிகளால் அமைக்கப்பட்டதே பெரியார் திராவிடர் கழகம்