Saturday, September 27, 2008

சேலத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம்

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இந்துத்துவா பயங்கரவாத சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சேலம் வருகையை கண்டித்து இன்று காலை பெரியார் திராவிடர்கழகம் சார்பில் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சேலம் இரும்பாலை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தோழர்களுடன் அனைத்து மனிதநேய அமைப்புகளும் கலந்துகொண்டன.


ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது இந்துத்துவா பயங்கரவாதிகள் பெரியார் திராவிடர்கழகத்தோழர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அமைதியாக தங்கள் கண்டனத்தை தெரிவித்த பெரியார் திராவிடர்கழகத்தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

அதன் பின்பு அப்பகுதிக்கு இரு சக்கரவாகனத்தில் தனியாக வந்த தோழர் ஒருவரை இந்துத்துவா பா.ச.க பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவரது இரு சக்கரவாகனத்துக்கு தீ வைத்து எரித்துள்ளார்கள்.

படுகாயம் அடைந்த தோழர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தோழர்கள் இன்னும் சிறையில் உள்ளனர்.

செய்தி

வ.அகரன்

Saturday, September 20, 2008

பெரியார் தனது எழுத்துகளை வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை! - கோவை கு.இராமகிருட்டிணன்


கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:


1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17 வது பிரிவின்படி பதிப்புரிமையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.

2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டு விட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத்துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.

5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.


6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்து களை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.


7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.

Monday, September 15, 2008

கோவையில் அண்ணா உருவில் 100 பெரியார் தி.க.வினர்Friday, September 12, 2008

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை


ஈழத்தில் தமிழர்கள் வாழும் வவுனியாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி - தமிழகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழும் வவுனியா பகுதியில் இலங்கையின் ராணுவ முகாம் மீது விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலில் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் எனும் இரண்டு - இந்திய பொறியாளர்கள் காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் இலங்கை ராணுவத்தால் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியதோடு, பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே வழங்கி வருவதாகக் கூறி வந்தது. இந்திய அரசின் கூற்று அப்பட்டமான பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராடார் கருவியை இந்தியா வழங்கியிருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பராமரிக்க இந்திய பொறியாளர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ராடார் கருவிகள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். சிங்களர்கள் வாழும் பகுதியில் அல்ல. 2005 ஆம் ஆண்டில் இந்த ராடார் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்திய அரசு - விடுதலைப் புலிகளின் விமானப்படை செயல்படத் தொடங்கிய பிறகு, மீண்டும் கடந்த 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகு ராடார் கருவியை மேலும் நவீனமாக்கி, பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு, இத்தகைய பாதுகாப்புகளை இந்தியா வழங்குவது தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு துணை போவதோடு மட்டுமல்ல, தாக்குதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளேயாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையிலிருந்து பல்வேறு சர்வதேசக் குழுக்களின் பிரதிநிதிகள் வெளியேறிவிட்ட நிலையில் - இந்தியாவின் பொறியாளர்கள் இலங்கையின் விமானப் படையில் 'அங்கமாகி' பணியாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே சக்தி வாய்ந்த போர்க் கப்பலை இலங்கை கப்பல் படைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கை விமானத்தின் குண்டு வீச்சிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க மனம் இல்லாதவர்கள், இலங்கை விமானப்படையைக் காப்பாற்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, கண் துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் - இனி, இலங்கை கப்பல் படை தாக்குதலே நடக்காது என்று உறுதிமொழி கூறினார். அடுத்த சில நாட்களிலே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது. தமிழக முதல்வரும் சடங்குப்படி பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதி விட்டார். இப்படி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தமிழர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை ஏமாளிகளாகக் கருதிவிடக் கூடாது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு வர வேண்டிய நிலை இருப்பதை மறந்து விட்டு செயல்பட வேண்டாம். இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு வன்மையாகக் கண்டித்து, தடுத்து நிறுத்த முன்வராவிட்டால், இந்த துரோகப் பழியை தமிழக அரசும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் வலிமையான கண்டனக் குரலை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- கொளத்தூர் மணி

தலைவர்

10/9/2008