Tuesday, September 29, 2009

தந்தை பெரியார் 131 ஆவது பிறந்தநாள் விழா - பொதுக்கூட்டம், சூலூர், கோவை


கடந்த 22.09.09 அன்று மாலை 6 மணியளவில் சூலூரில் தந்தை பெரியார் 131 ஆவது பிறந்தநாள் விழா - பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், இயக்குநர் சீமான் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.எஸ். கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பூர் மாவட்டத் தலைவர் சு.துரைசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினர்.தலைமை உரை நிகழ்த்திய பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் பேசும் போது,
இன்று தந்தை பெரியார் அவர்களின் 131 ஆவது பிறந்தநாள் விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். பலர் சொல்லுகிறார்கள் இன்றைய காலகட்டத்தில் பெரியார் இல்லையே என்கிறார்கள். தந்தை பெரியார் நவீன மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்திலும் 94 ஆண்டுகள் வாழ்ந்தார். தன் வாழ்க்கையையே தமிழ் சமூகத்திற்க்காக அர்ப்பணித்தார். நவீன மருத்துவ வசதிகள் இருந்திருந்தாலும் அவர் 131 ஆண்டுகள் இருந்திருக்க முடியுமா என்று சொல்ல முடியாது. ஆகவே அவர் இல்லையே என்று பேசுவதை விட அவர் கொள்கைகளை, இலட்சியங்களை, விட்டுச் சென்ற பணிகளை செய்வது தான் நாம் அவருக்கு பிறந்தநாள் விழா நடத்துவதன் சரியான பொருளாக அமையும். எவ்வளவு காலம் பெரியார் தேவையென்றால் சாதி ஒழியும் வரை, பெண்ணடிமைத்தனம் ஒழியும் வரை, சமத்துவ சமூகம் மலரும் வரை பெரியார் நமக்குத் தேவைப்படுகின்றார். இன்று ஈழத்திலே மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அகதிகளாக, அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நிலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்து இளைஞர்களை சந்தித்து காங்கிரசை வலுப்படுத்தப் போகிறேன்.அடுத்தமுறை ஆட்சியை பிடிக்கப் போகிறேன் என்று வந்தார். இன்றைய செய்தி என்னவென்றால் அவர் வந்து சென்று எந்தப் பலனும் இல்லை. இளைஞர்களை சேர்க்க முடியவில்லை என்பது தான். இங்கே உங்கள் கனவு என்றுமே பலிக்காது. ஏன் என்றால் இது பெரியார் பூமி. அவர் வாழ்ந்த மண். அவருக்குப் பிறகு தமிழர்களின் வீரம் மிக்க தலைவராக விளங்குகின்ற தம்பி பிரபாகரனை ஏற்றுக் கொண்ட மண். எனவே தான் சொல்லுகிறோம் உங்கள் கனவு பலிக்காது. என்று பேசினார்.சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது, இன்று நாம் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என்று பேசுகிறோம். இது எப்போது தொடங்கியது என்றால் விடுதலைப் புலிகள் போராடத் தொடங்கினார்களோ, ஜூலை கலவரம் 1983 ஆம் ஆண்டு தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 13 தமிழக மீனவர்களை முதன்முறையாக தாக்கினார்கள். அன்றிலிருந்து அவர்கள் சொல்லுகின்ற காரணம் விடுதலைப் புலிகள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள், எரிபொருட்கள் கடத்துகிறார்கள் என்பது தான். ஆனால் இப்போதும் தாக்குவதற்கு என்ன காரணம் என்பதை நாம் இப்போது யோசிக்க வேண்டும். அவர்களுடைய கூற்றுப்படி புலிகள் இயக்கம் அழிந்தது, பிரபாகரன் மறைந்தார் என்கிறார்கள். தமிழக முதல்வரோ அங்கே சகஜ நிலை திரும்பிவிட்டது என்கிறார். ஆனால் இப்போதும் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதே இந்திய மீனவர்களை பாகிஸ்தானில் உள்ள சில ஆயுதக் குழுக்கள் தாக்கினார்கள். அதற்கு பாராளுமன்றத்திலே பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிறார்கள். தமிழக மீனவர்களில் ஐந்நூறு பேரை சுட்டுக் கொன்று, இப்போதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கையின் அரச படைகளை கண்டிக்கக்கூட இந்தியா முன்வரவில்லை. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க யாரும் தயார் இல்லை. இந்த நாட்டில் நாம் தான் நம்மை இந்தியர் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நம்மைத் தமிழர்கள் என்று தான் பார்க்கிறார்கள். நாம் மட்டும் ஏன் நம்மை இந்தியர் என்று கருதிக்கொள்ள வேண்டும் என்பது தான் நாம் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் சிந்திக்க வேண்டிய செய்தி.
ஈழத்தில் முள்வேலிக்குள் மூன்று இலட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டிருப்பதைப் பற்றி பேசும் போது இங்கு நம் கண் முன்னால் தமிழ்நாட்டில் செங்கல்பபட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் ஏதோ வழக்கில் இருப்பவர்கள் என்று நினைக்க வேண்டாம். வழக்கை முடித்தவர்கள், விடுதலையானவர்கள், பிணையில் இருப்பவர்கள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் ஆண்டுக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எல்லா சிறப்புகளையும் தொடங்கி வைக்கும் கலைஞர் தான் இந்த சிறப்பு முகாம்களையும் தொடங்கினார். கொடுமைக்காரி ஜெயலலிதா என்று சொல்லப்படுகிற அந்த அம்மையார் கடந்த முறை 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு முகாமில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 6 ஆக குறைத்தார். ஆனால் நம் தமிழினத் தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு எண்ணிக்கை 100 ஆக உயர்த்தி விட்டார். ஈழத்தமிழர்கள் தான் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்று பார்த்தல் தமிழ்நாட்டு தமிழர்களும் சிறைச்சாலைகளில் உரிய தண்டனைக்காலம் முடிந்த பிறகும் கூட ஏதேதோ பிரிவுகளைக் காட்டி ஆண்டுக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்க்கெல்லாம் நாம் கேள்வி கேட்க வேண்டும். போராடத் துணிய வேண்டும். என்று பேசினார்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து முப்பது தோழர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து பெரியார் திராவிடர் கழகத்தில் இணைகிறார்கள். அதன் அடையாளமாக தோழர் பிலிஸ்து அவர்களும், தோழர் ரெஜின் ரோஸ் அவர்களும் பொதுக்கூட்ட மேடையில் கழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மேலும் ஈழத்தமிழினப் படுகொலையைத் தடுக்கும் நோக்கில் இராணுவ வாகன மறியலில் ஈடுபட்டு சிறை சென்ற தோழர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக நாம் தமிழர் அமைப்பின் சீமான் உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்காக கடந்த இருபது நாட்களாக சூலூர் ஒன்றிய கழகத் தோழர்கள் சூ.இரா.பன்னீர்செல்வம், கலங்கல் வேலுச்சாமி, அகில் குமரவேல், முனியப்பன், திலீபன், ஆட்டோ தேவா, சண்முகசுந்தரம், சரவணகுமார், இருகூர் கோடிநாதன், திருநாவுக்கரசு, காளப்பட்டி ஜெயபிரகாசு, அம்பேத்கர், சிங்கநல்லூர் மூர்த்தி, பாலா, பல்லடம் வடிவேல், சின்னச்சாமி, மணி மற்றும் சூலூர் வீரமணி ஆகிய தோழர்கள் கடுமையாக உழைத்தனர்.


Monday, September 21, 2009

இலங்கைக்கு சென்ற வேளாண் விஞ்ஞானிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பெரியார் திகவினர் 30 பேர் கைது

இலங்கை அரசின் வடக்கின் வசந்தத்துக்காக சிறிலங்கா சென்ற வேளாண் விஞ்ஞானிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் உட்பட 30 பேர் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழினத்தினை இலங்கையில் இல்லாதொழிக்கும் வகையிலான சிங்கள அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்காக இலங்கை சென்றுள்ள தமிழகத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி முருகேசன் தலைமையிலான குழுவினரைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக இன்று மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் சிறிலங்கா அரசைக்கண்டித்தும் , வடக்கின் வசந்தம் திட்டத்தினை எதிர்த்தும் , இலங்கை சென்றுள்ள தமிழக விஞ்ஞானிகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் உட்பட 30 பேர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Thursday, September 17, 2009

தந்தை பெரியார் 131வது பிறந்தநாள் நெல்லையில்

தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாளான இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை தந்தை பெரியார் சிலைக்கு தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.பாளையங்கோட்டை பெரியார் சிலையின் பராமரிப்பாளர்களான பெரியார் திராவிடர் கழகத்தின் தருண் வீடியோஸ் மற்றும் பெரியார் திகவின் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் , நெல்லை ராசா ஆகியோர் நேற்று இரவு தந்தை பெரியாரின் சிலைக்கு வண்ணம் பூசிவிட்டு நெல்லை முழுவதும் சுவரொட்டியை ஒட்டினார்கள்.

தூத்துக்குடியில் மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன் ஆகியோர் காலை 3 மணி வரை தூத்துக்குடி முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

சுவரொட்டியில் " தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாளான இன்று பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அடித்தளமக்களிடத்தில் கொண்டு செல்ல உறுதி ஏற்போம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.


இன்று காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை பெரியார் சிலை மாலை அணிவகுப்பு நிகழ்வில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன், தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு,தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் ,தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் ரவிசங்கர்,தூத்துக்குடி மாநகர துணைச்செயலாளர் கனகராசு, தூத்துக்குடி மாநகர பொருளாளர் அகரன் , நெல்லை ராசா மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.Thursday, September 10, 2009

முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08.09.2009) அன்று மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் ஆரம்ப நிகழ்வாக இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப் பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார்.

ஆசிரியர் ஹென்றி மற்றும் குழுவினர் ” தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை மனிதன் நினைக்கலாமா” பாடலின் வரிகளை சிறிது மாற்றி ஈழமக்களின் பிரச்சினையையும் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமாக இசையமைத்து பாடினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தனது உரையில் பள்ளி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை புரியும் வகையில் பழைய வரலாற்றினை எடுத்துக்கூறி ஈழம் தமிழரின் தாயகம் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தினார்.

விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன் என்றும் , அகிம்சை போராட்டம் என்றால் என்னவென்றும் காந்தி தேசத்துக்கே உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டிய தியாக தீபம் திலீபன் பற்றியும், தமிழீழத்தேசியத்தலைவரின் மனிதாபிமானம் பற்றியும், முள்வேலிக்குள் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் பற்றியும், பதுங்குகுழிக்குள் அமர்ந்து தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் உரையாற்றினார்.

பின்னர் அப்பள்ளியின் தலைமையாசிரியர் நிறைவுரையாற்ற ஆசிரியர் மரியதாஸ் நன்றியுரையாற்றினார்.

Monday, September 7, 2009

VIDEO - பெரியாரிய குடும்ப வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா


வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா காணொளி

இணையர்கள்:

ச.கோமதி - சி.ஆ.காசிராசன்

(நெல்லை மாவட்டச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்; மாவட்ட பொருளாளர்,தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)
தலைமையேற்றவர் :
நெல்லை S.மகாலிங்கம்
(மாநிலத்தலைவர் , தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)

விழாவினை நடத்திவைப்பவர் :
கொளத்தூர் தா.செ.மணி
(தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்)

இடம் : சோனா மகால், கோட்டூர் சாலை, பாளையங்கோட்டை.

நாள்: 06.09.2009 ஞாயிறு காலை 9.00 மணி


பெரியாரிய துணைநல ஒப்பந்த விழா - கொளத்தூர் மணி உரை


நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர்கள் தூத்துக்குடி பால்.பிரபாகரன், திண்டுக்கல் தாமரைக்கண்ணன், தோழர்கள் மேட்டூர் முத்துராசு, கொடுமுடி பாண்டி, மதுரை தோழர்கள் வெண்மணி, தமிழ்பித்தன், முருகேசன், சேகர், சின்ன உடைப்பு பெரியசாமி மற்றும் தூத்துக்குடி , திருநெல்வேலி தோழர்களும், ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

இணையர்களுடன் பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் தோழர்களும்
தலைமையேற்ற நெல்லை S.மகாலிங்கம்
(மாநிலத்தலைவர் , தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்)
பேராசிரியர் தொ.பரமசிவன்
( முன்னாள், தமிழ்துறை தலைவர் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

Wednesday, September 2, 2009

பெரியாரிய குடும்ப துணைநல ஒப்பந்த விழா

வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா அழைப்பிதழ்
இணையர்கள்:

சி.ஆ.காசிராசன் - ச.கோமதி

விழாவினை நடத்திவைப்பவர் :
கொளத்தூர் தா.செ.மணி
(தலைவர் , பெரியார் திராவிடர் கழகம்)

இடம் : சோனா மகால், கோட்டூர் சாலை, பாளையங்கோட்டை.

நாள்: 06.09.2009 ஞாயிறு காலை 9.00 மணி

பெரியார் திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்டச்செயலாளரும் தலைமைக்கழக உறுப்பினருமான சி.ஆ.காசிராசன் அவரது துணைநல ஒப்பந்த விழாவிற்கு அனைத்து தமிழுணர்வாளர்களையும் பெரியார் பாசறை வலைப்பூவின் வழியாகவும் தூத்துக்குடி , திருநெல்வேலி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாகவும் அழைக்கிறோம்.

தொடர்புக்கு :

+91 98650 13393 - தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், பெரியா திராவிடர் கழகம்.

+91 97914 26240 - நெல்லை ராசா, பெரியார் திராவிடர் கழகம், திருநெல்வேலி.