Saturday, February 7, 2009

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக்கண்டித்து கருப்புக்கொடி பேரணி : ஆர்.நல்லகண்ணு பங்கேற்பு

தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஈழத்தமிழர் படுகொலைக்கு துணைநிற்கும் இந்திய அரசைக்கண்டித்து ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி பேரணி தமிழீழ தேசியத்தலைவரின் படங்களையுடைய பதாகைகளை ஏந்தியபடி எழுச்சியொடு நடைபெற்றது.

இப்பேரணிக்கான ஏற்பாட்டினை தமிழர் தேசிய இயக்க தமிழ்நேயன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பாலவிநாயகர் கோவில் முன்பு துவங்கிய பேரணி பெரும் எழுச்சியோடு தொடங்கி தந்தி நிலையம் முன்பாக நிறைவடைந்து கண்டனக்கூட்டம் நடைபெற்றது.

பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் மற்றும் ஈகி தூத்துக்குடி முத்துக்குமரன் அவர்களின் படத்தினையும் சட்டையில் குத்திக்கொண்டும் , கைகளில் "தமிழீழம் மலரும்" என்று தலைவரின் படத்துடன் எழுதப்பெற்ற பதாகைகளையும் ஏந்தியபடி வந்தனர். அனைவரும் உணர்ச்சி பொங்க தமிழீழம மலரட்டும் விடுதலைப்புலிகள் வெல்லட்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர்.இந்திய காங்கிரசு மற்றும் திமுக , அதிமுக போன்ற தமிழர் விரோத கட்சிகளை கண்டித்தும் முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர்.

இப்பேரணியில் இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவையின் வே.மனோகர் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன் , மீனவர் கழக ஆன்டன் கோமசு , வழக்கறிஞர் சங்க தலைவர் டி.பிரபு , வழக்கறிஞர் அதிசயக்குமார் , வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் , மதிமுக ஜோயல் , மோகன்ராசு (இ.பொ.க) , தமிழக இளைஞர் கழக தமிழரசன் , வெனி.இளங்குமரன் , நக்கீரன் , தமிழ்மாந்தன் , செந்தமிழ்பாண்டியன்(வி.சி) மற்றும் பலர் தங்கள் கண்டன உரையினை பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தூத்துக்குடியில் வாழ்ந்து வரும் சிலோன் குடியிருப்பு மக்கள் திரளாக குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கட்சிபாகுபாடின்றி அனைத்து மக்களும் தமிழுணர்வுடன் கலந்துகொண்டனர். இலங்கைத்தமிழர் என்றுக் கூறிவரும் நிலையில் எவ்வித வேறுபாடு இன்றி தூத்துக்குடியில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டது முத்துமாநகரில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.





No comments: