ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08.09.2009) அன்று மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் ஆரம்ப நிகழ்வாக இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப் பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார்.
ஆசிரியர் ஹென்றி மற்றும் குழுவினர் ” தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை மனிதன் நினைக்கலாமா” பாடலின் வரிகளை சிறிது மாற்றி ஈழமக்களின் பிரச்சினையையும் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமாக இசையமைத்து பாடினார்.
பின்னர் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தனது உரையில் பள்ளி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை புரியும் வகையில் பழைய வரலாற்றினை எடுத்துக்கூறி ஈழம் தமிழரின் தாயகம் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தினார்.
விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன் என்றும் , அகிம்சை போராட்டம் என்றால் என்னவென்றும் காந்தி தேசத்துக்கே உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டிய தியாக தீபம் திலீபன் பற்றியும், தமிழீழத்தேசியத்தலைவரின் மனிதாபிமானம் பற்றியும், முள்வேலிக்குள் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் பற்றியும், பதுங்குகுழிக்குள் அமர்ந்து தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் உரையாற்றினார்.
பின்னர் அப்பள்ளியின் தலைமையாசிரியர் நிறைவுரையாற்ற ஆசிரியர் மரியதாஸ் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment