Monday, May 4, 2009

பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி இன்று விடுதலை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்ட தமிழுணர்வாளரும் பெரியார் திக தலைவருமான கொளத்தூர் மணி அவர்கள் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் “ஈழம் எரிகிறது” என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிராக பேசியதாக திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மார்ச் 2-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் பேரில் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனைதொடர்ந்து கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வக்கீல் கணேசன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி பசீர் அகமது விசாரித்து, கொளத்தூர் மணிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அதில் 3 மாதத்திற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொளத்தூர் மணி நேரில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று நீதிபதி பசீர் அகமது கூறியுள்ளார்.

வெள்ளியன்று(மே 1) கோர்ட்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவரின் ஜாமீன் உத்தரவு இன்று 4-ந் தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டு மூலம் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments: