Thursday, January 8, 2009

இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடி பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் 700 தோழர்கள் கைது

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர்கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கைது செய்யப்பட்டனா.

சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொள்வதைக் கண்டித்தும் தமிழகம் கட்சிகளைக் கடந்து ஒருமித்தக் கண்டனக் குரலைத் தெரிவித்து வருகிறது.

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது.

சிங்கள இராணுவத்தின் தமிழினப்படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது.

மத்திய ஆட்சித் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும், பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் ஆளாளுக்கு
அறிக்கைகளை அளித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமையில்லை என்று பேட்டி அளிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி தொடரும் என்கிறார்கள் . ஏன் ? இராணுவ உதவிகளும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள்.

அதோடு ஈழச்சிக்களைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப்பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக்மெய் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை நேரில் சந்தித்து பேசும் 04.12.2008க்குப் பின் மூன்று நாட்களுக்குள் இணக்கமான முடிவேதும் தெளிவாக அறிவிக்கப்படாவிடில் 08 /12/08 மேல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் 01.12.2008 அன்று அறிக்கை வெளியிட்டனர்.

இதனிடையே 19.12.2008 அன்று தலைவர் கொளத்தூர் மணி தமிழகக்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வந்திருந்தார்.

இதனால் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பெரியார் திராவிடர்கழக தோழர்கள் திரளாக இன்று (08.01.2009) காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருமணமண்டபத்தில் சிறைவைக்கப்பட்டு மதியம் 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் லோகு.அய்யப்பன் தலைமையில் புதுவையிலிருந்து 150 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும், கோவையிலிருந்து மாநகர அமைப்பாளர் தோழர் இ.மு.சாஜித் ஒருங்கிணைப்பில் 170 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் , சேலம் ஈரோடு பகுதியிலிருந்து தோழர் இராம.இளங்கோவன் ஒருங்கிணைப்பில் 300க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் , மதுரையிருந்து 120 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் ,மற்றும் பல பகுதியிலிருந்தும் திரளாக பெரியார் தி.க. தோழர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ந.பன்னீர் செல்வம் தலைமையில் திரளான மாணவர்களும் , ஏனைய பிற அமைப்பின் தலைவர்களும், சென்னையில் வேறொரிடத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்த தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கடைசி நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வார்ப்பாட்டத்தில் பங்குகொண்டார்.
செய்தி : பெரியார் பாசறை செய்தித்தொகுப்பு
நிழற்படங்கள் : வே.மதிமாறன்

No comments: