Sunday, April 20, 2008

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளில் எழுச்சியோடு நடைபெற்ற சாதி ஒழிப்பு பரப்புரை பயணம் (14 ஏப்ரல் 2008 )






தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14’ 2008 ல் தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை சாதி ஒழிப்பு பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது. பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த பரப்புரை பயணத்தில் ஆதித்தமிழர் பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் பங்கெடுத்தனர். பரப்புரை பயணம் சென்ற இடங்களில் மக்கள் சனநாயக கட்சி , தமிழ் தேசிய இயக்கம் , திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் வரவேற்று பரப்புரை பயணம் வெற்றியடைய ஆதரவளித்தனர். மேற்படி பரப்புரை பயணத்தின் செய்தி தொகுப்பு பின்வருமாறு.,

தொடக்கவிழா:

பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்பு பரப்புரை பயணம் ஏப்ரல் 14’ 2008 காலை 8.00 மணிக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்புள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன், மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு ஆகியோர் மாலை அணிவித்தபின்பு பயணம் தொடங்கியது. மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் தொடங்கிய பரப்புரை பயணத்தில் மன்னை இராம.முத்துராமலிங்கம் சாதி ஒழிப்பு பிரச்சாரப்பாடலுடன் தொடங்கப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ஆ.காசிராசன் முன்னிலை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் க.கண்ணன் பரப்புரை பயணத்தை தொடங்கிவைத்து உரையாற்றினார். பரப்புரை பயணத்தை விளக்கி பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக பேச்சாளரும் செயற்குழு உறுப்பினருமான பால்.பிரபாகரன் விளக்க உரையாற்றினார். பயணத்தின் தொடக்கத்தில் விடுதலைச்சிறுத்தைகள் , பகுஜன் சமாஜ் கட்சி , நந்தமிழர் இயக்கம் , தி.மு.க. பன்னாட்டு தமிழுறவு மன்ற தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர். மாவட்டச்செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்


சிதம்பர நகர்:

தூத்துக்குடி சிதம்பரநகர் சந்திப்பில் பரப்புரை பயணம் வந்தடைந்ததும் கழக பாடகர் மன்னை இராம.முத்துரமலிங்கம் அவர்களின் இசை நிகழ்வுடன் தொடங்கியது. தலைமை உரையினை பொறிஞர் சி.அம்புரோசு ஆற்றியதற்குப் பின்பு புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா. தமிழரசன் சாதி ஒழிப்பிற்கு என்றும் முன்நிற்கும் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இந்த சாதி ஒழிப்பு பரப்புரை பயணம் அம்பேத்கர் பிறந்த நாளில் மேற்கொள்வது சிறப்பானது என்றும் தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி பெரியார் திராவிடர் கழகத்தின் இது போன்ற பணிகளுக்கு துணை நிற்கும் என உரையாற்றினார். இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பால் பிரபாகரன் பரப்புரை பயணத்தை விளக்கிச் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார் .
வ.அகரன்

No comments: