Thursday, January 15, 2009

இலங்கை போரை உடனே நிறுத்த வற்புறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் திகவினர் மூவர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை போரை உடனே நிறுத்த வற்புறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் திகவினர் மூவர் தீக்குளிக்க முயற்சி

( 15.01.2009)

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று விடுமுறை நாள் என்பதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திடீரென மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களது விபரம் :-

1. தோழர் பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர்,

2. தோழர் சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர்.

3. தோழர் கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்..

கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் வெ.ஆறுச்சாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

இலங்கையில் சிங்கள ராணுவம் விமானத்தில் குண்டு களை வீசி கொடூர மான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

5 லட்சம் தமிழர்கள் சாவின் விழும்பில் உள்ளனர். அவர்கள் முல்லைத் தீவில் பதுங்கி உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வற்புறுத்தியும் இதுவரை இந்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்ல வில்லை.

மவுனமாக இருந்து வரும் மத்திய அரசை தமிழக அரசில் கட்சி தலைவர்கள் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்.

மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்லும் வரை நாங்கள் எந்த பண்டிகையும் கொண்டாட மாட்டோம். மேலும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார்கள். என்று கூறினார்.


இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

No comments: