Friday, November 7, 2008

புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட தமிழுணர்வாளர்கள் விடுதலை

புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கம் கிராமத்தில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்புக்கள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் 01-11-2008 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அப்போது புதுச்சேரி உள்துறை அமைச்சர் மலையாளி வல்சராஜின் தூண்டுதலின் பேரில் அவருடைய கைக்கூலியான இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் தலைமையில் ரவுடிக் கும்பல் ஒன்று குடிபோதையில் அத்துமீறி உண்ணாவிரதப் பந்தலில் நுழைந்து பந்தல் மற்றும் ஒலிபெருக்கியை நாசம் செய்ததோடு மட்டுமல்லாமல் அப்போது பேசிக் கொண்டிருந்த புதுவை தமிழர் தேசிய இயக்க தலைவர் தோழர் அழகிரியின் சட்டையைப் பிடித்து அடிக்க வந்தனர். அதனைக் கேள்விப்பட்டு உடனடியாக புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் லோகு.. அய்யப்பன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தோழர். பாவாணன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது உடனடியாக அந்த வன்முறை ரவுடிக் கும்பல் சாலையின் மறுபுறம் சென்று காவல் துறையின் பாதுகாப்புடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர் இரு தரப்பினரையும் ஒரே விதமான சட்டப் பிரிவின் கீழ் கைது செய்வதாக கூறி கைது செய்தனர். ஆனால் மேற்குறிப்பிட்ட அந்த ரவுடிக் கும்பல் மீது எந்தவிதமான வழக்கும் பதியாமல் பிரச்சனையைக் கேள்விப்பட்டு வந்த புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது பிணையில் வெளிவராத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இதனை அறிந்ததும் மற்ற அமைப்புகளின் தோழர்கள் வெகுண்டெழுந்து கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தின் உள்ளே விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதனால் அதிர்ந்து போன காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் வருவாய் துறை உயர் அதிகாரிகளும் புதுவை துணை ஆட்சியரும் பத்து முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பாண்டியன் ரவுடிக்கும்பல் மீது வழக்குப் பதிவதாக கூறிவிட்டு கோரிமேடு தன்வந்தரி நகர் காவல் நிலையத்தில் புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவருக்காக போராடிய அனைத்து தோழர்களையும் கைது செய்து ஞாயிற்றுக் கிழமை விடியற் காலை 4.00 மணியளவில் புதுவை சிறையில் அடைத்தனர்.

பின்னர் 03-11-2008 திங்கள் மாலை லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவரை தவிர்த்து மற்றவர்களை பிணையில் விட்டனர். மேலும் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது பிணையில் வெளியில் வராத சட்டப்பிரிவுகளின் கீழ் மறுபடியும் இரண்டாம் முறையாக கைது செய்து சிறையில் வைத்தனர்.

பின்னர் 05-11-2008 அன்று மாலை பிணையில் வெளிவந்த புதுவை பெரியார் தி. க. தலைவர் லோகு. அய்யப்பன் உள்ளிட்ட மூவருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

ஊர்வலத்தில் புதுவை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோழர் பாவாணன்இ மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர் செல்வன்இ பகுசன் சமாஜ் கட்சி தலைவர் தங்க. கலைமாறன்இ புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை தலைவர் சி. மூர்த்திஇ மீனவ மக்கள் முன்னேற்றத் தலைவர் சக்திவேல்இ பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் முத்துஇ மதிமுக பிரமுகர்; கபிரியேல் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். பெரியார் தி.க. தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். சிறைச்சாலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை காங்கிரசு மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவை உள்துறை அமைச்சர் மலையாளி வல்சராஜ் தூண்டுதலின் பேரில் புதுவை காவல் துறை கண்காணிப்பாளர் மலையாளி சிவதாசன் தலைமையில் காவல் துறையினர் பல இடங்களிலும் ஊர்வலம் நகரின் உள் நுழையாதவாறு தடுக்கப் பார்த்தனர்.

இறுதியாக ஊர்வலம் பல தடைகளைத் தாண்டி புதுவை ராஜிவ் காந்தி சிலை சந்திப்பில் வந்த போது காவல் துறையினர் தங்களுடைய வாகனங்களையும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் கண்ணீர் புகை வீசும் வாகனங்களையும் சாலையின் குறுக்கே நிறுத்திஇ காவல்துறையினர் வரலாற்றில் முதல் முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பெரியார் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் சிங்காரவேலர் சிலைக்கும் மாலை அணிவிக்க அனுமதி மறுத்தனர்.

இதனால் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தலைவர்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சென்று பெரியார் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்த தோழர்கள் நகருக்குள் செல்லாமல் புறச் சாலை வழியாக சிங்காரவேலர் சிலைக்கு வந்தனர். பெரியார் சிலைக்கும் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்த தலைவர்கள் பின்னர் தோழர்களோடு சேர்ந்து சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து அரியாங்குப்பம் நகரில் உள்ள பெரியார் சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இறுதியில் அரியாங்குப்பம் நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களின் உரையோடு ஊர்வலம் நிறைவுபெற்றது.

- அகரன்

No comments: