தந்தை பெரியாரின் கொள்கைகள் முழுமையும் செயல் வடிவம் காண எந்த பலமும் இல்லாமல் தந்தை பெரியாரின் கொள்கை பலத்தை நம்பியே பாசறை நடை போட்டது. 1996 இல் “பெரியார் பாசறை” தென்மாவட்டங்களில் தொடங்கி பரப்புரை செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.
“பெரியார் பாசறை”- பெரியார் படத்தை துண்டறிக்கையில் போடுகிறது, கருப்புச்சட்டை அணிகிறார்கள்... திராவிடர் கழகத்திற்கும் பாசறைக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதால் திராவிடர்கழகத்திலிருந்து தனித்து காண்பிக்க தனியாக கொடி வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திராவிடர் கழக கொடி சொல்லும் அதே கருத்தை சொல்ல வேண்டும் ஆனால் வேறுபாடும் தெரிய வேண்டும் என்பதால். கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம் கொண்ட கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.பாசறை தோழர்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
அந்த கொடிக்கான விளக்கத்தை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அறிவித்தார். அதில் கருப்பு நிறம் - பழமைவாதம் மூடநம்பிக்கை உள்ள சமூகத்தையும், சிகப்பு நட்சத்திரம் - பகுத்தறிவு புரட்சியாக நடுவில் இருந்து பெரியார் சொன்ன ஐந்து கொள்கைகளாக விரிந்து அந்த கருப்பு சிகப்பாக மாறும் என்பதே ஐமுனை நட்சத்திரம்.
முனை 1: சாதி ஒழிப்பு
முனை 2: மதமூடநம்பிக்கை ஒழிப்பு
முனை 3: பெண்ணுரிமை
முனை 4: உலக தமிழருக்கான நலன்
முனை 5: தமிழருக்கான நாடு
என கொடிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
பாசறையின் தூண்களாய் விளங்கிய மறைந்த பெரியவர் இராம.கணேசனார், செ.பால்துரை, சு.இலட்சுமணன், ந.முருகேசன், க.மதன் & வே.பால்ராசு போன்ற தோழர்கள் கொடியினை தென் மாவட்டங்களில் பறக்க உதவினர். முதல் கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் பால்.பிரபாகரன் வீட்டில் ஏற்றப்பட்டது. இரண்டாவது கொடி மறைந்த பெரியவர் இராம.கணேசனார் இல்லத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. பெரியார் பாசறை-தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமான போது உறுப்பாய் விளக்கியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமாக பேசுகின்ற போதே பாசறை கொடியே த.பெ.தி.க கொடியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மூன்று பெரிய அமைப்புகள் சேரும் போது. அந்த பெரிய அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விடுதலை .இராசேந்திரன் பொதுச்செயலாளராக விளங்கிய பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டு கோவை.கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளராக விளங்கிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் கொடியான கருப்பு சிகப்பு கருப்பு கொடியானது அமைப்பின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆம் கருப்பு சிகப்பு கருப்பு தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியாக மாறியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளைஞர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி தொடர் போராட்டங்களால் தமிழகத்தை தன் பக்கம் பார்க்க வைத்தது. அப்போது கருப்பு சிகப்பு கருப்பு கொடியினை அரசியல் கட்சி கொடியாக மக்கள் பார்க்கத்தொடங்கினர். ஒரு அரசியல் கட்சி (மதிமுக) கொடியா? என கேட்கத்தொடங்கினர். இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக்குழு கூடி விவாதித்து இயக்கத்தின் பெயரை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியும் இயக்கத்தின் கொடியினை மாற்ற முடிவு செய்து மாவட்ட கழகங்களுக்கு வடிவமைத்து வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கொடியினை மாற்ற வேண்டாம் என்றும் தமிழகம் முழுமையும் மாற்றி ஆக வேண்டும் என விரும்பினால் பெரியார் பாசறையின் கொடியை (கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம்) பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மாநில ஆட்சிக்குழு பரிசீலித்து பெரியார் பாசறை கொடியினை பெரியார் திராவிடர் கழகக்கொடியாக ஏற்றுக்கொண்டது.
கொடியினை முறையாக ஈரோட்டில் சென்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக மாநாடான சாதி ஒழிக்க பெரியார் சட்டம் எரித்த 50 ஆண்டு நிறைவு சாதி ஒழிப்பு மாநாட்டில் கொடியினை ஏற்றி வைக்கும் வாய்ப்பை கொடியினை உருவாக்கிய பெரியார் பாசறை அமைப்பாளரும், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பால்.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கியது பெரியார் தி.க. தலைமை. கொடியினை உயர்த்தி வைத்து கொடி குறித்து நெகிழ்ந்து அவர் ஆற்றிய உரையினை "பெரியார் முழக்கம்" வெளியிட்டது. ஆம் அவர் உரையில் குறிப்பிட்டதை போல் பாசறை கொடி தமிழ் நாடு முழுமையும் பறக்குமா? என்ற கேள்விக்கு விடைகிடைத்தது. அந்த கேள்வியோடு தூத்துக்குடி நகரத்தில் பாசறை கொடியேந்தி வந்த மாவீரன் மறைந்த பெரியவர் இராம.கணேசனாருக்கு மட்டும் பதில் தெரியவில்லை பாசறை கொடி தமிழகத்தில் எங்கும் பறக்கிறது என்ற உண்மை.
No comments:
Post a Comment