Sunday, March 2, 2008

தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 02.03.2008 அன்று தூத்துக்குடி சோமா விடுதியில் தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் ஆழ்வை ந.முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பால்.பிரபாகரன் மற்றும் சி.ஆ.காசிராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.

தீர்மானம் 1

தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுறவம்(தை) முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு (தமிழ் நாடு அரசு) தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது. தமிழர்கள் மீது இழிவான பிறப்பை அடிப்படையாக கொண்டு சித்திரையை தமிழ் புத்தாண்டாக நம்மீது இதுவரை திணித்து வந்த பார்ப்பனிய சக்திகளுக்கு சாவு மணியடித்ததாக கருதி இக்கூட்டம் பெருமிதம் கொள்கிறது. தை திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசிற்கும் முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இக்கூட்டம் நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.

தீர்மானம் 2

உடுமலைப்பேட்டை சாளரப்பட்டியில் சாதிய வெறியுடன் இரட்டைக்குவளை முறையினை தேனீர் கடைகளில் அமுல்படுத்தியதை கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் , ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் போராடியதன் விளைவாக தேனீர் கடைகள் அடைக்கப்பட்டதையும், ஒரு குவளையினை பயன்படுத்த மறுத்ததை இக்கூட்டம் கண்டிக்கிறது. மனிதநேயத்தோடு ஒரு குவளையினை நடைமுறைப்படுத்திய கிருட்டிணசாமி எனும் ஆதிக்கசாதிகாரரை அடித்து கடையினை சூறையாடிய சாதிவெறியர்களை கைது செய்ய வேண்டும் என போராடிய பெரியார் தி.க., ஆதித்தமிழர் பேரவை தோழர்களை கைது செய்ததை இக்கூட்டம் கண்டித்து தனது கண்டனத்தை தெரிவிக்கிறது. சாதி வெறியுடன் நடந்துகொண்ட சாளரப்பட்டி சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வீட்டை எரித்து சாம்பலாக்கி வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தியதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக காவல்துறையினை இக்கூட்டம் கண்டிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3

வரும் மார்ச் 10-ம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் தமிழர் நலனுக்கு எதிரான சக்திகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து அவர்களை பொதுக்கூட்டத்திற்கு சிறப்புப்பேச்சாளராக அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.



தீர்மானம் 4

வரும் ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தநாளை சாதி ஒழிப்பு பிரச்சார பயணம் மேற்கொண்டு மாவட்டம் முழுமையும் பிரச்சாரக்கூட்டங்கள் நடத்துவது என்றும் இதற்கான செலவிற்கு தோழர்கள் ஒவ்வொருவரும் ரூ.200/- கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 5

தீவிரவாதிகளை ஒழிக்க இலங்கை இந்திய கடல் எல்லையில் கண்ணிவெடிகளை வைக்கிறோம் எனும் பெயரில் இலங்கை கடற்படை கச்சத்தீவு பகுதிகளில் கண்ணிவெடிகளை வைத்து தமிழக மீனவர்களை காவு வாங்க காத்திருக்கும் இச்செயலை கண்டிக்க மறுக்கும் இந்திய அரசை இக்கூட்டம் கண்டிக்கிறது. தமிழர் வாழ்வுரிமையை காத்திட மறுக்கும் இந்திய அரசு கச்சத்தீவில் கோவில் திருவிழாவிற்கு ஆண்டு தோறும் தமிழகத்திலிருந்து தமிழர்கள் செல்வதை கடந்தாண்டு போல் தடை செய்திருப்பது இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிப் பார்க்க வேண்டியதாகிறது. எனவே இந்திய தலைமை அமைச்சர் தமிழக மீனவர்களை காப்பற்றவும் தமிழர் உரிமையினை பாதுகாத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுகொள்கிறது.

தீர்மானம் 6

தமிழர் கால்வாய் திட்டத்தை இராமன் பெயரை சொல்லி தடுக்க நினைக்கும் மதவாத கும்பலுக்கு அடிபணிந்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கிற்கு பதில் மனு அனுப்பும்பொழுது உண்மக்கு புறம்பாகவும், உப்பு சப்பில்லாத செய்தியினை பதிவு செய்து உச்ச நீதிமன்ற முடிவுக்கு விடுவது என்பது மத்தியரசின் இயலாமையை காட்டுவதாக இக்கூட்டம் கருதுகிறது. அம்பிகாசோனி போன்ற அமைச்சர்கள் இது தொடர்பாக அளிக்கும் பேட்டிகள் மதவாதத்திற்கு ஆதரவாக இருப்பதால் இது போன்ற இரட்டை வேடம் போடுவதை மத்திய அரசு தவிர்க்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலாளர் க.மதன், தூத்துக்குடி நகரத்தலைவர் கோ.அ.குமார், நகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன், நகர இணைச்செயலாளர் செ.செல்லத்துரை , தோழர்கள் ச.சோசப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி : வ.அகரன்

No comments: