Sunday, January 30, 2011

முத்துக்குமாரின் சொந்த ஊரில் அணிதிரண்ட தமிழினம்

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 29 இல் முத்துக்குமரனின் பிறந்த இடமான கொழுவைநல்லூர் நோக்கி தமிழினமே அணிதிரள்வோம் என்ற நோக்கத்தோடு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் பகத்சிங் மற்றும் தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் மதுரையிலிருந்து வாகன பேரணியாக கொழுவை நல்லூர் நோக்கி திரளான மக்கள் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மதுரை தமுக்கம் தமிழன்னை சிலையிலிருந்து கொழுவை நல்லூர் நோக்கி சுடரோட்டம் வாகன அணிவகுப்பு காலை 10 மணியளவில் தொடங்கியது.

இவ் அணிவகுப்பானது நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொண்டு போராடிய வழக்கறிஞர்கள் பகத்சிங், தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் முத்துக்குமார் வீரவணக்க பிரச்சாரம் செய்தனர். பின்னர் மாலையில் வடக்கு ஆத்தூரிலிருந்து தியாகச்சுடர் ஏந்தி நடை பேரணியாக கொழுவை நல்லூர் முத்துக்குமாரன் வீடு வரை பேரணியாக சென்றனர்.

முத்துக்குமார் இல்லத்தில் வீரவணக்க நிகழ்வு தியாகி இம்மானுவேல் பேரவை தலைவர் சு.சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. தியாகச்சுடரினை முத்துக்குமாரின் பாட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் வீரவணக்கவுரையாற்றினார். தொடர்ந்து வழக்கறிஞர் பகத்சிங் உரையாற்றினார். இறுதியாக பேரணியில் பங்கேற்ற தமிழுணர்வாளர்களுக்கு வழக்கறிஞர் தங்கப்பாண்டியன் நன்றியுரையாற்றி அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் மதுரையிலிருந்து 200க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஊர்தியில் வந்திருந்தனர். பெண்களும், குழந்தைகளும் திரளாக வந்திருந்தது எழுச்சியை ஏற்படுத்தியது. நிகழ்வில் பெண்கள் விடுதலை மய்ய தோழர் அகராதி, பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாநகர செயலாளர் பால்.அறிவழகன், தமிழ்நாடு மாணவர் கழக அகரன், மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தமிழரசன், தமிழ் புலிகள் அமைப்பின்ர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.









Monday, January 24, 2011

தமிழருக்கான தேசிய சிந்தனைகள் மக்கள் மனதில் உதிக்கட்டும், மலரட்டும்: கொளத்தூர் மணி

முத்துக்குமார் இனவெழுச்சி சுடர்பயணம் இன்று நீலகிரியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொளத்தூர் மணி தனது உரையாற்றுகையில் " தமிழருக்கான தேசிய சிந்தனைகளும், தமிழ் தேசிய தேவையும் மக்கள் மனதில் இப்பயணத்தால் உதிக்கட்டும், வளரட்டும் என்று தெரிவித்துள்ளார்.