தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர். நேற்று மாலை சரியாக 6.05 மணியளவில் கொளத்தூர் அருகில் 1983 இலிருந்து 1989 வரை விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட "புலியூர் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில்" பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத்தலைவர் செ.மார்ட்டீன் தலைமையேற்க மாவீரர் பாடல்கள் ஒலிக்க வீரவணக்க நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் கொண்ட இரு மாணவர்களும் , பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியின் சகோதர் தா.செ.பழனிச்சாமியும் தீபம் ஏற்றி வீரவணக்க நிகழ்வினை தொடங்கி வைத்தனர். கொளத்தூர் பொதுமக்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக திரண்டு வந்து வரிசையில் நின்று அமைதியாக தீபம் ஏற்றி மலர் தூவி தங்கள் வீரவணக்கத்தினை செலுத்தினர். இந்நிகழ்வினை பெரியார் திராவிடர் கழகத்தின் டைகர் பாலன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். ஒன்றியத்தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் காவை ஈசுவரன், ஒன்றியச்செயலாளர் காவை இளவரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் விசயக்குமார், நகரச்செயலாளர் இளஞ்செழியன், காவை சசிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கவனித்தனர். முன்னதாக சேலம் கோவிந்தப்பாடி அருகில் "பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நகர்" பெயர்ப்பலகையை தோழர்கள் காவை ஈசுவரன் சேலம் டேவிட் ஆகியோர் திறந்து வைத்தனர்.          
|