Sunday, March 8, 2009

தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி , இயக்குநர் சீமான் கைதைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் இயக்குநர் சீமான் , நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றக்கோரி குரல் கொடுக்கும் தமிழுணர்வாளர்களை ஆளும் திமுக அரசு தமிழின விரோத் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாக கைது செய்து சிறையில் அடைத்துக்கொண்டிருக்கிறது. இதைக்கண்டித்து தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் கோ.அ.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கடந்த 2-ந் திகதி அன்று கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு விவரம் வருமாறு:-

ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூகநீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ்காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நாம் செய்ய தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்த போது நாம் உண்மையில் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம். செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்.

இதே போல் திரைப்பட இயக்குனர் சீமானும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புதுச்சேரி கூட்டத்தில் பேசிய பேச்சு விவரம் வருமாறு:-

நம் இன மக்களை அழிக்கும் நாட்டிற்கு துணை போவதும் அல்லாமல், அங்கு கிரிக்கெட் விளையாட தனது அணியை அனுப்பியிருக்கிற, ஈன தனத்தை செய்கிற ஒரு தேசத்தை எப்படி நாங்கள் நேசிப்பது? இதை சீமான் கேட்டால், சீமான் இந்திய தேசத்திற்கு எதிரானவன் என்று கைது செய்ய மட்டும் தெரிகிறது. இந்த நாட்டில் இறையாண்மை பேசி திரிகிறவர்களுக்கு, காவிரி நதி நீர் வாங்கித்தர வக்கில்லை, அப்போது எங்கே போனது தேசியம்? இதை கேட்க வக்கற்ற, இந்த காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் படுகொலையை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்கிறார்கள். புலிகள் வேறு, மக்கள் வேறு அல்ல, யார் புலி? சீமான் புலி. அவன் செத்தால், அவன் தம்பி புலி. இது தான் வரலாறு. அங்கு என்ன நிகழ்கிறது. திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை. கொத்து கொத்தாக கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான என் மக்கள் செத்து விழுகின்றனர். இது தெரியாதவர்கள், புலிகள் வேறு, மக்கள் வேறு என்கின்றனர்.

மேற்கண்டவாறு இராஜூவ் காந்தியைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் சொன்னதற்காக இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் கைதைக்கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தினை பெரியார் திக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு முன்னிலை வகிக்க கிருத்துவர் வாழ்வுரிமை இயக்கத்தின் பனி.சுந்தரி மைந்தன் துவக்கிவைத்து கண்டன உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்த்தின் அரிகரன் , ஆதித்தமிழர் பேரவையின் இரா.வே.மனோகர் , மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் வழக்குரைஞர் அதிசயக்குமார் ,உடற்தொழிலாளர் சங்கத்தின் கிருட்டிணமூர்த்தி , பெரியார் திக சி.அம்புரோசு , இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் வழக்குரைஞர் மோகன்ராசு ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இவ்வார்ப்பட்டத்தின் விளக்கவுரையினை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தெளிவு பட விளக்கினார். " ஆளும் கட்சி காங்கிரஸ் ஆனது இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதைப்போலத்தான் பாரதீய ஜனதா கட்சியும் தனது ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கியதையும் , இராஜூவ் செய்த போபர்ஸ் பீரங்கி ஊழலை மறைக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தினை அனுப்பி ஈழத்தமிழர்களை அழித்ததையும் " தனது உரையில் தெளிவுபட விளக்கினார்.

தொடர்ந்து நிறைவுரையாற்றிய வழக்குரைஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு தனது உரையில் " நான் எப்பொழுதும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவேன், நான் விடுதலைப்புலிகளின் வழக்குரைஞர் என் மேல் வழக்கு போட இயலுமா...? தூத்துக்குடியில் ஈழத்தமிழர்களுக்காக செயல்படும் தமிழுணர்வாளர்களுக்கு எவ்வித சட்டச்சிக்கல் வந்தாலும் நாங்கள் இலவசமாக வழக்குரைஞர் சங்கம் சார்பில் வாதாடுவோம்" என்று தனது உரையில் கூறினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திக மாவட்டத்துணைத்தலைவர் வே.பால்ராசு , மாவட்டச்செயலாளர் பாலசுப்பிரமணியன் , மாநகரச்செயலாளர் பால்.அறிவழகன் , க.மதன் , அறிவுபித்தன் , வ.அகரன் , விடுதலைச்சிறுத்தை கட்சியின் ஆறுமுக நயினார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பெரியார் திகவின் தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

No comments: