Wednesday, December 17, 2008

ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளே தமிழகத்தில் தமிழர்களால் கொடுமைக்கு உள்ளாகும் தமிழர்களாகிய எங்களுக்கு எப்பொழுது குரல் கொடுப்பீர்கள்

15.12.2008 :
வல்லநாடு அருகே தீண்டாமை வழக்கில் தண்டனை பெற்ற ஆத்திரத்தில் விவசாயியை வெட்டிக் கொன்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை அரபாத் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (34), விவசாயி. இவருக்கும் மணக்கரை யை சேர்ந்த ராமசாமி மகன்கள் சங்கரபாண்டி, மூக்காண்டி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கண்ணனின் அண்ணன் ராமரை கடந்த 2004ல் சங்கரபாண்டியும், மூக்காண்டியும் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக நெல்லை தீண்டாமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சங்கரபாண்டி, மூக்காண்டி ஆகியோருக்கு ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 30.9.2008ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்தனர். தான் கைதானதற்கு கண்ணன்தான் காரணம் என கருதி அவரை கொலை செய்ய மூக்காண்டி திட்டமிட்டார்.
நேற்று(15.12.2008) மாலை கண்ணன் தனது மகன் அருளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூக்காண்டி, அவரது தம்பி ராஜா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமசாமி ஆகியோர் கண்ணனை ஆயுதங்களுடன் வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து உயிர் தப்ப நினைத்த கண்ணன் தனது மகனை விட்டு விட்டு அருகில் உள்ள கடைக்குள் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் மூவரும் அவரை விரட்டிச் சென்று அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.


கொலை பற்றி தகவல் அறிந்தநெல்லை டி.ஐ.ஜி.கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க், ஸ்ரீவைகுண் டம் டி.எஸ்.பி. முத்தையா, தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. நடராஜ மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மூக்காண்டி, ராஜா, ராமசாமி மூவரையும் தேடி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆறாம்பண்ணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையட்டி மணக்கரை, மணக்கரை வடக்கூர், ஆறாம்பண்ணை, ஆறாம்பண்ணை அராபத்நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணன் தம்பி உட்பட 3 பேரை பிடிக்க புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

16.12.2008 :

காலையில் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி பிணவறை முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.

பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர்கள் தோழர் பால்.பிரபாகரன் , தோழர் சி.ஆ.காசீராசன் மனித உரிமை கழக தோழர் வழக்கறிஞர் அதிசயகுமார் , தோழர் வழக்கறிஞர் இராமச்சந்திரன் , தோழர் அகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை விளக்கிக்கூறி பின்னர் உடலை பெற்றுக்கொண்டு மதியம் 2 மணியளவில் ஆறாம்பண்ணை பகுதியில் அடக்கம் செய்தனர்.

17.12.2008 :
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் உள்ள ஆறாம்பண்ணை என்னும் சிற்றூரில் ஆதிக்க சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது செலுத்தும் சாதீயக்கொடுமைகளை பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு , மனித உரிமைகள் கழக வழக்கறிஞர்கள் தோழர் அதிசயகுமார், தோழர் இராமச்சந்திரன் மற்றும் ஆறாம்பண்ணை ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கிய காணொளி.1)


2)


3)"ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளே தமிழகத்தில் தமிழர்களால் கொடுமைக்கு உள்ளாகும் தமிழர்களாகிய எங்களுக்கு எப்பொழுது குரல் கொடுப்பீர்கள்"

இக்கருத்தைத்தான் பெரியார் திராவிடர்கழகம் முன்வைக்கிறது.

செய்தி - அகரன்

No comments: