Tuesday, December 2, 2008

தமிழக மாணவர் கூட்டமைப்பு ஈழத்தமிழர் ஆதரவு பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம்

தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர் நா.எழிலன் தலைமையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நவம்பர் 18 அன்று சென்னையில் தொடங்கப்பட்ட வாகனப் பிரச்சாரம் பல மாவட்டங்களில், பல சிற்றூர்களில் வெற்றிகரமாக மேற்கொண்டு இறுதியாக திசம்பர் 01 அன்று கோயம்பத்தூரில் நிறைவு பெற்றது.

தமிழக மாணவர் கூட்டமைப்பின் வாகன பிரச்சார நிறைவு விழா பொதுக்கூட்டம் கோவையில் சித்தாபுதூர் வி.கே.மேனன் சாலையில் நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவரணியான தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் ந.பன்னீர்ச்செல்வம் தலைமையேற்றார். நிகழ்வில் நங்கவள்ளி அன்பு , செந்தில், அன்பு, தனசேகரன் ஆகியோர் உரைக்குப்பின் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்திய அரசாங்கம் இலங்கை இனவாத அரசிற்கு இராணுவ உதவிகளையும் இராணுவ தொழில் நுட்ப வல்லுனர்களையும் இலங்கைக்கு அளித்தது தமிழ் மக்களை கொன்றுக்குவிப்பதற்கு இந்திய அரசாங்கமும் துணை போகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது. இந்த ஆயுதங்களை கொண்டுதான் ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை படையினர் அழித்துவருகின்றார்கள்.

நமது வரிப்பணத்தில் நம் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு பெரியார் திராவிடர்கழகம் கண்டனம் தெரிவித்து இவ்வருடத்தின்(2008) தொடக்கத்தில் பெரியார் தொண்டர்கள் தனது சொந்த செலவில் தில்லி சென்று போராடினார்கள். இப்பிரச்சினையில் முதன்முதலில் இந்திய அரசங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தது பெரியார் திராவிடர் கழகமே. என்றும் காங்கிரசு கட்சிக்காரர்கள் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டில் திருமாவளவனை தில்லிக்கு அனைத்துக் கட்சியினர் கூட்டத்துக்கு அழைத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. விடுதலைப்புலிகள் மீதான எதிர்ப்பு பிரச்சாரத்தை காங்கிரசு கட்சிக்காரர்களுக்கு தைரியம் இருக்குமானால் தனது தேர்தல் அறிக்கையில் அவர்கள் தங்களது விடுதலைப்புலிகள் எதிர்ப்பை வெளியிட வேண்டும். என்று கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்.

அதன் பின் கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் இந்திய இறையாண்மை என்னும் போலித்தனத்தை கண்டித்து உரையாற்றினார். இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளை எடுத்துக்கூறினார். விடுதலைப்புலிகளின் வான்படையை இந்திய அரசு தனக்கு பாதுகாப்பின்மையாக கருதுகிறது என்றால் பிஜி தீவிலும் இலங்கையின் 3 இடங்களில் எண்ணை கள ஆய்வு என்னும் பெயரில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவை நோக்கி முகாம்களையும் மாலைதீவுகளிலும் சீன அரசாங்கம் தனது கடற்படை தளத்தினை அமைத்துவிட்டது.

இலங்கையினை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீன அரசாங்கம் கோடிக்கணக்கிலான பணங்களை கொடுத்து இராணுவ உதவி செய்துவருகிறது. சீன நாடு இந்தியாவிற்கெதிரான நிலையினை கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இது இந்தியாவை பாதிக்கும் என்று உளவுத்துறையினர் தகவலை கொடுத்ததற்கு பதிலாக விடுதலைப்புலிகளின் வான்படையினை மட்டும் பாதுகாப்பின்மையாக இந்திய அரசிற்கு ஆலோசனை சொல்வது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசிற்கு எதிராக இந்திய சீனப்போரிலும் இந்திய-பாக்கிசுதான் போரிலும் சிங்கள அரசாங்கம் சீனப்பாகிஸ்தான் அரசுகளுக்கு ஆதரவாக இருந்ததை மறந்துவிடக்கூடாது. சிங்கள பேரினவாத அரசை ஆதரிப்பது இந்திய அரசின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை எடுத்துக்காட்டி விளக்கி பேசினார்.

மேலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ உதவியை நிறுத்திவிட வேண்டி வரும் திசம்பர் 4 ஆம் நாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையிலான அனைத்துக்கட்சிக்குழு பிரதமரை சந்திக்க இருக்கிறது.தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வுகளை பதிவு செய்ய இருக்கிறார்கள். இதனை இந்திய அரசு உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரசு கட்சியினர் என்பதை அம்பலப்படுத்த திசம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் தமிழகம் வரும் காங்கிரசு மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இச்செய்தியை கேட்ட கூட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் ஏகோபித்த ஆதரவை தெரிவிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

அடுத்ததாக பரப்புரைப் பயணத்திற்கு தலைமையேற்றுவந்த மருத்துவர் நா.எழிலன் 15 நாட்கள் பிரச்சாரப் பயணத்தின் அனுபவத்தினையும் தமிழ்மக்கள் பயணத்தின் பொழுது தெரிவித்த ஆதரவினையும் கருத்துக்களையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார். இலங்கையில் ஆட்சி செய்யக்கூடிய இனப்படுகொலை செய்துவருகின்ற இராஜபக்சே ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்து வருவதாகவும் சிங்கள மக்கள் இப்போரினை விரும்பவில்லை. இராணுவ அரசாங்கம் போர்க்கருவிகளை வாங்குவதற்கு இலங்கையின் மொத்த வருமானத்தில் நாற்பது விழுக்காடு பணத்தினை இராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு பயன்படுத்துவதும் அத்தொகையில் கழிவுத்தொகையினை பெறுவதிலும்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் சிங்கள மருத்துவர்கள் தன்னைச்சந்தித்த பொழுது இக்கருத்தினை தெரிவித்ததாக கூறினார்.

தமிழக மக்கள் ஈழப் பிரச்சினையில் உணர்ச்சிவசப்படாமல் தமிழர்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். 17 ஆண்டுகள் இப்பிரச்சினையைப்பற்றி நாம் யோசிக்காமலேயே இருந்துவிட்டோம். இப்போது நாம் அதற்கான முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் தமிழர்களுக்கு ஆதரவான குரலை ஓங்கி ஒலிப்பதற்கு இது போன்ற பெரியாரியல் அமைப்புடன் சேர்ந்துகுரல் கொடுக்கவேண்டியது அவசியமாகும். இனியும் தமிழர்கள் வாக்காளர்களாக மட்டும் இருந்துவிடக்கூடாது. ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவாக நின்றிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

தன்னுடைய சகோதரியின் இறப்பிற்கு கலந்துகொள்ள கோவை வருகை தந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் தனது காலில் அடிபட்ட நிலையில் கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கூட்டம் நடைபெறுவதைக்கண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் தேசியம் என்றும் இறையாண்மை என்றும் காங்கிரசுக்காரர்கள் கூச்சலிடுவதைக் கண்டித்து இந்திய இறையாண்மையை பாதுகாக்க முடியாத இவர்கள் இலங்கை இறையாண்மையைப் பற்றி அக்கறைப்படுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் ஈழத்தமிழர்களுடைய இன்னல்களுக்கும் அவர்கள்படும் அவதிகளுக்கும் முடிவாக "தனித்தமிழீழம்" அமைந்தே தீரும் என்றுக் குறிப்பிட்டார்.

பெரியாரின் கொள்கை உணர்வினால் தமிழர்கள் தமிழர்களின் படுகொலையினை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பெரியாரின் பற்றாளர்கள் நாங்கள் உலகில் எந்த இனமக்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுப்போம். பெரியாரின் பேரன்களாக இருந்தாலும் சரி, அவரது இரத்த உறவுகளாக இருந்தாலும் சரி, பெரியாரின் சொத்து உறவுகளாக இருந்தாலும் சரி, இன உணர்வுகளுக்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தக்கது. இந்த உணர்வுகள் எங்களுக்கு சொந்தமானது. நீங்கள் பத்திரங்களை வேண்டுமானால் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெரியாரின் கொள்கைகளை(அறிவுடைமகளை) எங்களிடமிருந்து பிரித்துவிடமுடியாது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் காங்கிரஸ்காரர்களைக் கண்டித்து உரையாற்றினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன் ஈழத்திலே நடைபெறுகிற போராட்டத்தினைப் பற்றியும் இலங்கைமண் தமிழர்களின் மண் என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகளுடன் விளக்கமாக உரையாற்றினார். அவர் உரையில் இந்தியாவை தான் நேசிப்பதகாகவும் என்னைப்போன்றே தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராளிகளும் இந்தியாவை நேசிக்கிறார்கள். இந்தியாவிலே இருக்கின்ற நான் இந்திய அரசின் சட்டத்தினை மதித்தும் இந்திய அரசை மதித்தும் எங்களுடைய ஈழப்போராட்டத்தின் உண்மையை எடுத்துவிளக்க விரும்புகிறேன். நான் பேசுவது புலிகளின் ஆதரவு பிரச்சாரம் அல்ல புலிகளின் ஆய்வு பற்றியதாகும். ஒரு காக்கையை தன்மடியில் வைத்து உணவு கொடுத்து பராமரிப்பது ஆதரவளிப்பதாகும். அந்த காக்கை கருமை நிறமானது பறந்து செல்லக் கூடியது என்று அதைப் பற்றிய செய்திகளை சொல்வது ஆய்வுக் கருத்துக்களாகும். அதைப்போன்று புலிகளின் ஆய்வு பற்றிய கருத்துக்களை மூன்று வினாக்களில் நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

1) எந்த விடுதலைப் புலியாவது அப்பாவி சிங்களவர்களையோ அல்லது அவர்களுடைய வீடுகளையோ தாக்கியதாக செய்தி வந்திருக்கிறதா?

2) எந்த சிங்கள குழந்தைகள் படிக்கிற பள்ளிகளிலோ மருத்துவமனைகளிலோ வழிபாட்டுத் தலங்களிலோ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்லமுடியுமா?

3 ) எந்த விடுதலைப் புலிகளாவது சிங்கள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று சொல்லமுடியுமா?

சிங்கள அரசுதான் அதனுடைய இராணுவ படைதான் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களையும் அவர்களுடைய உடைமைகளையும் நாசப்படுத்தி இருக்கிறது. சிங்களப்படைதான் செஞ்சோலை போன்ற சிறுவர்கள் இல்லம் மீது விமானத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. சிங்களப் படைதான் 6000 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள்.புலிகளின் போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு அல்ல. தந்தை செல்வா அவர்களின் வட்டுக்கோட்டை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட "தனித் தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கான விடுதலை" என்ற அறிவிப்பை நிறைவேற்ற விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள். அமைதியான முறையில் தந்தை செல்வா அவர்கள் போராடினார்கள். அவர்களை ஆயுதம் கொண்டு சிங்களவன் அடக்க முயற்சித்தான். அதே ஆயுதத்தைக் கொண்டே எமது மக்கள் சிங்களவர்களை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஈழப் பிரச்சினையில் தெளிவான சிந்தனையும் கருத்தினையும் கொண்டிருந்தார்கள். ஈழத்திலே நடைபெறுகிற படுகொலை இனப்படுகொலை என்று அறிவித்தார்கள். 1960 களில் நான் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்பொழுது இது போன்று அப்பொழுது நடைபெற்ற ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து உண்ணாநிலையை 6 நபர்கள் கொண்டு நாங்கள் சென்னையில் நடத்தினோம் அதனை முடித்து வைப்பதற்காக இராஜாஜி அவர்களைக் கேட்டுக்கொண்டபொழுது இராஜாஜி அவர்கள் எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துவைத்து ஒரு அறிக்கையினையும் பத்திரிக்கைகளுக்கு கொடுத்தார். அந்த செய்தி மறுதினம் இந்து மற்றும் மெயில் நாளேடுகளில் வந்தது. அதில் தெளிவாக ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற மண் அவர்களுடைய பூர்வீக மண் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஆனால் அதே இந்து பத்திரிக்கை இப்போது அது சிங்களவர்கள் பூமி என்று இப்பொழுது செய்தி எழுதுகிறது. இலங்கை என்பது ஒரு தமிழ் சொல்தான் இலங்கை முழுவதும் தமிழர்களின் ஆட்சியில்தான் இருந்தது. நாளடைவில் மொழிக் கலப்பினத்தினால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு சிங்களம் உருவான பின்பு 25000 ச.கி.மீ பரப்பு கொண்ட இலங்கையில் 15000 ச.கி.மீ யில் சிங்கள மக்களும் 10000 ச.கி.மீ இல் தமிழ்மக்களும் வாழ்ந்து வந்தார்கள். பிரிட்டீசார் 1948 இல் வெளியேறிய பொழுது 2000 ச.கி.மீ களில் சிங்களவர்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தி சிங்களவர்கள் 17000 ச.கி.மீ.ஆகவும் தமிழீழம் 8000ச.கி.மீ.களாகவும் ஆக்கிவிட்டனர். அதற்குப் பின்னால் 3000 ச.கி.மீ களையும் படிப்படியாக சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். 10000 ச.கி.மீ இல் இருந்த தமிழீழம் 5000 ச.கி.மீ. ஆக சுருங்கிவிட்டது. இழந்த 5000 ச.கி.மீ களையும் மீட்க வேண்டியது எங்களுக்கு ஒரு வேலையாகும்.

இந்திய அரசாங்கம் எம்மக்களை விரோதியாக கருதினாலும் இந்தியாவிற்கு விரோதியாக இருக்கக்கூடிய பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ நாங்கள் உதவிகளை கேட்கமாட்டோம். இந்தியாவை நாங்கள் இன்னும் நம்புகிறோம். இந்தியா எங்களை காப்பாற்றும் என்று உறுதியாக இருக்கிறோம். என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் பெரியார் திராவிடர்கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை வெ.ஆறுச்சாமி நன்றியுரையாற்றினார். 15 நாட்கள் தொடர் பரப்புரை பயணத்தினை மேற்கொண்ட மருத்துவர் நா.எழிலன் தலைமையிலான தோழர்களுக்கு தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, இயக்குநர் மணிவண்ணன் , உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன் ஆகியோர் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

பல்வேறு பணிகளுக்கு இடையே மாணவர்கள் நடத்திய இப்பரப்புரைப் பயணம் ஒரு வரலாற்றுப் பதிவேட்டில் பதிக்கப்பட வேண்டிய செய்தியாகும். இப்பரப்புரைப் பயணம் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டாக அமைந்தது.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

No comments: