Friday, August 22, 2008

கடலூர்.வீரமணியின் கண்ணியம் பாரீர்! - ஈரோட்டுக்கண்ணாடி

முக்கிய அறிவிப்பு
தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்துணையும் அவர்களால் 1935-இல் உருவாக் கப்பட்டு, 1952இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும் (Intellectual Properties).இவைகளை அச்சில் வெளியிட்டு விளம்பரமும், வருவாயும் தேட தனிப்பட்ட சிலரும், சில இயக்கங் களும், பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரிய வருகிறது!அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும்.மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கி.வீரமணி ஆயுள் செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
(நன்றி:விடுதலை 12/08/2008- பக்கம் 6)
தண்ணீரில், தத்தளிப்பவன் கட்டுமரமென நினைத்து..முதலையை பற்றியது போல்அந்தோ, பெரியார் மறைந்தாரே...என்று கலங்கி நின்று, தத்தளித்த பெரியார் தொண்டர்கள்- கடலூர்.வீரமணியை தலைவராக் ஏற்றுக்கொண்டார்கள்.1983 -ல் தொடங்கிய ஈழப்போராட்டம், தமிழின உணர்வை வீறுக்கொண்டெழச் செய்தது. நம் இனப்போராட்டத்திற்கான தளபதி என கருஞ்சட்டைகளால் அடையாளப்படுத்தப்படடார் வீரமணி. 1991- இராசீவ் மரணத்திற்குப்பின், தமிழர் தளபதியின் வாள் உறையிலிருந்து பூனைக்குட்டிக்கள் வெளிவரத்தொடங்கின. பெரியார் நிறுவனங்களின் பாதுகாப்பிற்கான , தளபதியின் இராசதந்திரம் என மனதைத் தேற்ற வேண்டியதாகியது. இவரின் "இராசதந்திரம்" குறித்து ,மேலும் தெரிந்துக்கொள்ள, இன்றும் பெரியாரியல் குடும்பமாகவே, வாழ்ந்துவரும் கவிஞர்.குயில்தாசன் - அற்புதம் அம்மாவையும்(பேரறிவாளனின் பெற்றோர்) கேட்டுப் பார்க்கலாம். பார்ப்பன எதிர்ப்பையே அடியுரமாகக் கொண்டு வளர்ந்த திராவிடர் கழகத்தின் -தாய் கழகத்தின் பொதுச்செயலாளர் என்று பீற்றிக்கொள்ளும் வீரமணி, பார்ப்பன ஜெயலலிதாவிற்கு" சமுக நீதி காத்த வீராங்கனை" பட்டம் தந்த போது தான் வீரமணியின் சுயநலத்தை, கருஞ்சட்டைத்தொண்டர்கள் முழுதாக புரிந்துகொண்டனர்.

ஊழல் வழக்கில் சிறையிலிருந்த பார்ப்பன ஜெயலலிதாவை சிறையில் சந்திப்பதும்,அவருக்கு பிறந்த நாள் லாவணி பாடுவதுமாக, அய்யாவின் பணி முடிக்க ஆவன செய்தவர் தான் இந்த கடலூர்.வீரமணி.

தமிழ்நாடு தமிழருக்கே ! என தேசிய சுயநிர்ணய உரிமைக்கான சங்க நாதம் செய்த பெரியாரின் சொத்திலிருந்து, பார்ப்பன பி.ஜே.பி யின் கார்கில் கபட நாடகத்திற்கு நிதி வழங்கிய இவரின்,பெரியார் பார்வையை என்னவென்று புகழ்வது????

௨000 ஆம் ஆண்டில், ஜெயலலிதா ஆதரவு போதையிலிருந்த வீரமணி, அன்றைய கலைஞர் ஆட்சி ஒழிய வேண்டும், கருநாடகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், கலைஞருக்கு அவமானம் நேர்ந்து- ஜெயாவின் மனம் குளிர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.சமரச முயற்சியில் ஈடுபட்ட தோழர். கொளத்தூர்.மணிக்கு முட்டுக்கட்டையிட்டதுடன், 30ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரியக்கமே மூச்சாகக் கொண்டு உழைத்த அவரை தி.க வை விட்டு நீக்கி தமிழின வரலாற்றில் தனது துரோகத்தையும் முறையாக பதிவு செய்துகொண்டார்.

பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, கலைஞராலேயே, "போயஸ் தோட்டத்து பூசாரி" என புகழப்பட்டவர் தான் வீரமணி.

தான் வழிப்பட்டு வந்த ஜெ. யின் கடைக்கண் பார்வை, பெரியாரின் சொத்துக்களின் விழுந்தவுடன் கருப்புச்சட்டை மாட்டிக்கொண்டு, "சண்டித்தனம்" எதுவும் செய்யாமல் கோபாலபுரத்திற்கு நடையை கட்டினார்.

இப்படியாக போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் ஏன், சத்தியமூர்த்தி பவனுக்கும் கூட அரசியல் தரகில் ஈடுபட்ட வீரமணி பெரியார் தத்துவப் பிரச்சாரத்தை முழுதாக மறந்தாலும், பெரியாரின் " தமிழர் தலைவர்" பட்டத்தை தனது பெயருடன் ஒட்டி வைத்துக் கொண்டார்.

பெரியாரின் எழுத்துக்கள், திடலில் செல்லரித்து கிடக்க... இவரின் " வாழ்வியல் சிந்தனைகள்" பள பள புத்தகமாக வெளிவருகின்றன.

1925_1938வரையிலான குடிஅரசு- 27தொகுதிகளாக பெரியார் திராவிடர் கழகத்தால் வெளிவர இருக்கிறது என செய்தி அறிந்து இடியோசை கேட்ட அரவமாக சீறுகிறார் கடலூர்.வீரமணி.

தன் செய்யத்தவறிய " வரலாற்றுக்கடமையை" கொளத்தூர்.மணி கையில் எடுத்துக்கொண்டதை, சகிக்கமுடியாமல், பொறாமையில், பொச்செரிச்சலில் தான் மேற்கண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரியாரின் எழுத்துக்கள் வெளிவரக்கூடாது என காவிக்கூடாரங்கள் கூக்குரலிட்டால் அர்த்தம் புரிகிறது.

  • பெரியாரின் குடிஅரசு வெளிவரக்கூடாது ; மக்களிடம் சென்று சேரக்கூடாது என்று கருப்புச்சட்டை வீரமணி சொல்வது ஏன்?

  • விளம்பரமும், வருவாயும் தேட குடிஅரசுதொகுதி வெளியிடுவதாக கூறும், வீரமணியே, 1973முதல்2008வரை இதற்குத் தான் நூல்கள் வெளியீட்டிர்களா?

  • 2003வரை தி.க வின் பொதுசெயலாளராக இருந்த நீங்கள், தோழர்.கொளத்தூர்.மணியை தலைவராகக் கொண்டு பெரியார் தி.க செயல்பட தொடங்கியவுடன், தனக்குத் தானே தி.க தலைவராக முடிசூட்டிக்கொண்டு, பெரியார் நாற்காலியை துண்டுப் போட்டு பிடித்துக்கொண்டது ஏன்?

  • கொளத்தூர்.மணி பெரியார்.தி.க தலைவரானதால், தி.க தலைவரான நீங்கள், அவரைப்போல, குடும்ப சொத்தை அடமானம் வைத்து, பெரியார்- குடிஅரசை அவர் வெளியீடுவது போல் வெளியிடத் தயாரா?

  • பார்ப்பனர் அல்லாதார், வேதம் படிக்கக்கூடாது; கேட்கக்கூடாது என்கிறது....மனுநீதி பார்ப்பனீயம்! பெரியாரின் எழுத்துக்களையும் மறைப்பொருளாக்கி,திடல் வாழ் ஒரத்த நாட்டுப் பார்ப்பனர்களின் பாதுகாப்பில் பெரியார் நூல்களை செல்லரிக்க விடுவது தான் உங்கள் நவீன பார்ப்பனீயமா?
  • குடிஅரசு ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த கலைஞரின் ஆட்சியில், தி।க தலைவரின் தூண்டுதலின் பேரில் குடிஅரசு தொகுதிகள் வெளியிடுவதற்காக தோழர்.கொளத்தூர்.மணியின் மீது "சட்டபூர்வ நடவடிக்கை" எடுக்கப்படுவது எந்த பெரியார் தொண்டருக்கும் கிடைக்காத பெருமையை அவருக்குத் தேடித் தரும்.
நன்றி- http://erottukannadi.blogspot.com/index.html#8092210017512559020

No comments: