அவர் கேள்வியில் முதல் வார்த்தைகளான இது தான் மதமென்றால் ... என்பதை விளக்கி ஆம் இது தான் "மதம்" என்று காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் மதம் என்பது என்ன? அந்நிறுவனத்தைப் பற்றி நாம் என்ன கருத்து வைத்திருக்கின்றோம்? இன்று மதத்தைப் பற்றி பல புதிய வியாக்கியானங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதம் மனித இனத்தின் "ஆன்மா" "இளைப்பாறுதல்" இப்படியாகப் பல…
இவற்றிற்குள் உள்ளே போவதோ இவற்றைப் பரிசீலிப்பதோ நமது நோக்கமன்று. இக்கட்டுரை தனது பயணத்தைத் துவங்குமுன் வரலாற்றில் மதம் வகித்திருக்கும் பாத்திரத்தின் அடிப்படையில் "மதத்தை" வரையறை செய்து கொள்ள விரும்புகிறது. மதம் என்பது என்ன?
மதத்தின் தலைவன் "கடவுள"காரண கர்த்தாவாகக் கற்பிக்கப்பிட்டிருப்பினும் கடவுள் தான். .இந்தக் கடவுளின் கருவறை ஆதிமனிதனின் அறியாமையும், பயமும் தான.கடவுளின் தொடர்ந்த இருத்தலுக்கு ஆயிரம் காரணத்தைக் கற்பிக்கலாம். ஆனால் தோற்றுவாய் இது தான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அறியாமை தோற்றுவித்த இந்தக் குழந்தையை "அயோக்கியர்கள்"தத்தெடுத்து வளர்த்தனர். மதம் ஓரு மிகப் பெரிய நிறுவனமானது புரோகித கூட்டங்களின் நன்மைக்காகவே. நமது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதுவே உண்மையாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இதுவே மதங்களின் வரலாறாக உள்ளது. இந்த நீண்ட வரலாற்றில் இம்மதமானது அரசு, தேசம், இனம், குடும்பம், இலக்கியம் இப்படி மானுடவியலின் அனைத்து அம்சங்களுடனும் இணை பிரியாத் தோழமை பூண்டு விட்டது. மதத்துடனான மோதலிலேயே கருக்கொண்டு உருக்கொண்டு வளர்ந்த அறிவியலுடன் கூட இன்று அது சமரசம் பேசிக் கொண்டு தனது ஆளுமையை நிலை நிறுத்திக் கொள்ள வழி தேடிக் கொண்டு விட்டது. இப்படி அனைத்திலும் ஊடுருவி நிற்கும் மதத்தை எதிர்த்து மக்களிடையே பணி செய்ய முடியாது என்று முற்போக்களார்களும் மயங்கும் காட்சியில் இன்று நாம் நிற்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரையில் மதத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதன் வன்முறை முகத்தையும் மறந்து விட்டு எந்த திரிபுவாத விளக்கங்களுக்குள்ளும் போக விரும்பவில்லை. மதம் இன்று தோற்றம் தருவது போல் வெறும் கருத்தியல் ரீதியான வன்முறையில் மட்டும் ஈடுபட்ட ஓர் அமைப்பு அல்ல.
ஆயுதந் தாங்கிய வன்முறை எந்தவொரு மதத்திற்கும் விதிவலக்கானதல்ல. அன்பைப் பற்றி பேசுவதற்கு ஓரு சிறிதும் யோக்கியதையேயில்லாத ஓர் அமைப்பு உண்டென்றால் அது மதம் தான் என்று யாரும் துணிந்து கூறலாம்.
வன்முறை வாயிலாக மட்டுமே அனைத்து மதங்களும், முக்கியமாக கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்துமதங்கள் தங்களை நிலைநிறுத்தி வளர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று மாந்த இனம் தனது அமைதிக்காகவும், சமாதனத்திற்காகவும், இளைப்பாறு தலுக்காகவும் மதத்தை அண்டி வாழ்வது போலதானதொரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சரி, எப்படியாயினும் மதம் இன்று நாம் எடுத்துக் கொண்டிருக்கும் தனித் தலைப்பல்ல.
இக்கட்டுரையைப் பொறுத்த வரையில் குறிப்பாக மதம் பெண்கள் வாழ்வில் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றி மட்டுமே பார்க்க இருக்கிறோம். இன்று நடைமுறையில் நாம் காணும் பெண்கள் மதத்தின் மீது தீவிர மரியாதையும் ஈடுபாடும் கொண்டு காணப்படுகின்றார்கள் மதரீதியிலான சடங்குகளில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலே அவர்களுக்கு எதிர்காலம் பாதுகாக்கப்படுவதாக ஓரு உணர்விருக்கிறது. ஓர் கோணத்தில் அவர்களுக்கு அது நல்லதொரு பொழுதுபோக்காகவும் இருக்கிறது. தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சமூக இருத்தல், அங்கீகாரம் அல்லது மரியாதை இப்படியாக விளங்கியும் விளங்காததமுமான உணர்வுகளும் அவர்களை உந்தித் தள்ளுகின்றன. உள்ளுற இவற்றை கடைப்பிடிக்கத் தவறினால் தாங்கள் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற மத அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் உளவியல் அச்சமும் அவர்களை இயக்குகிறது. ஆக இப்படி பல்வேறு காரணிகளின் கூட்டு செயற்பாட்டினால் இவ்வமைப்பை சிரமேற் கொண்டு பெண்கள் தாங்கி வருகிறார்கள்.
அடிமை வாழ்வுக்கே உரித்தான தன்மானமின்மையும் பயமும் அருவெறுக்கத் தக்க குறுகிய சுயநலமும் தவிர இதில் பொதிந்திருக்கும் மகோன்னதமான உண்மை என்று எதுவுமில்லை. ஏங்கெல்சு வரலாற்றில் தோன்றிய காலத்துக்குச் சொன்ன வார்த்தைகளை நமது காலமும் சுமந்து கொண்டு நிற்கிறது.
ஆம் பெண்ணினத்தின் மீது ஆணினம் வெற்றி கொண்டு விட்டது. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு முடி சூட்டும் வேலையை தோல்வியுற்றவர்கள் தாராள சிரத்தையுடன் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்
மதம் பெண், ஆண் இருபாலாரையும் வன்முறைக்குட்படுத்திய, உட்படுத்திக் கொண்டிருக்கின்ற ஓரு நிறுவனம் தான். ஆனாலும் நாம் துவக்கத்திலேயே குறிப்பிட்டது போல மதம் யாருடைய நன்மைக்காக வளர்க்கப்பட்டதோ அந்த புரோகிதக் கூட்டத்தார் ஆண்கள் கூட்டமாகவே இருந்தபடியால் (குறிப்பாக ஏடறிந்த வரலாற்றுக் காலத்துக்குப் பிறகு) அது ஆண்களுக்கான அமைப்பாக என்று மட்டுமல்ல ஆண்களுக்காகவே பெண்கள் வாழ்ந்து தீர வேண்டும் என்று வலியுறுத்துகிற கொடுங்கோன்மை அமைப்பாகவும் பரிணமித்து விட்டது. "சிகாகோவில்"போய் விவேகானந்தர் கூறுகிறார் இந்து மதத்தின் ரிஷிகள் பெண்களாக இருந்தார்கள் என்று. உடனே நாமும் அப்படியா? என்று எப்படிக் கேட்டுக் கொள்வது என்று தெரியவில்லை. அது உண்மையானால் அதனை அந்த எழுத்துக்கள் தான் நிரூபிக்க வேண்டும். மற்றப்படி கடவுள் நிலைதானே ரிஷிகளுக்கும் …. கண்டவர் யார்? விண்டவர் யார்?
கடவுள் ஆணாக இருக்கின்றான்
மதங்கள் அனைத்தின் தலைமைக் கடவுள்களும் ஆண்கள் தான். பெண்ணியச் சிந்தனை என்ற பெயரில் சிலர் இப்போது கடவுளைப் பெண்ணின் உருவாகக் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். இதெல்லாம் பெண்ணினத்தைக் காப்பாற்ற அல்ல மாறாக மதத்தைக் காப்பாற்றவே உதவக்கூடும். கடவுள் மட்டுமல்ல தலைமைப் புரோகிதர்களும் எல்லா மதங்களிலும் ஆண்கள் தான். இன்று பெண்கள் சிந்திக்கத் துவங்கியவுடனேயே கடவுளைப் பெண்ணாக சித்தரிக்க அவர்கள் முயல்கிறார்களே …விவேகானந்தர் கூறுவதைப் போல் ஆதிகால இந்து ரிஷிகள் பெண்களாக இருந்திருப்பார்களேயானால் கடவுளை பெண்ணாக உருவகிக்கத் தானே விரும்பியிருப்பார்கள்?
உலகளாவிய மதங்களாகிய கிறிஸ்;துவம், இஸ்லாம் நமது நாட்டின் இந்து மதம் இவை மூன்றையும் நாம் முகாமையாக எடுத்துக் கொண்டுள்ளோம். ஓவ்வொரு மதமும் பெண்ணின் படைப்பு. இருத்தல், வாழ்க்கை, படைப்பு பற்றிய கோட்பாடு
உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதே மதத்தின் துவக்கமாகும். தொடர்ந்து மனிதனைப் படைத்தவன் கடவுள் என்ற கருத்தை முன்வைத்தே அது தன் வரலாற்றைத் துவங்குகிறது. இந்த ஆண்டவனின் படைப்பிலேயே ஆணும் பொண்ணும் சமமானவர்களாக இல்லை என்பது தான் ஆணாதிக்க சிந்தனையின் மூலமாகும். ஓவ்வொரு மதமும் படைப்பு பற்றிய தனது கோட்பாட்டை எவ்வாறு முன்வைக்கிறது என்பதை நாம் முதற்கண் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்…இன்று வரையிலும் கூட யூதர்கள் தங்களுடைய அன்றாட பிரார்த்தனையில் தங்களை பெண்ணாக படைக்காதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்." இப்படியாகப் படைக்கப்பட்டிருக்கிற ஒரு கடவுளை அந்தக் கடவுளின் பேரால் புனையப்பட்டிருக்கிற மத நிறுவனத்தை எந்தப் பெண்ணாவது ஏற்றுக் கொள்வாளா??
கிறிஸ்த்துவம் - ஆதியாகமம்
18. பின்பு, தேவனுகிய கர்த்தர். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல. ஏற்றதுணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
19. தேவனுகிய காத்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணிலே உருவாக்கி "ஆதாம்" அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும் படி அவைகளை அவனிடத்தில் கொண்டு வந்தார்". அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானே அதுவே அதற்கு பேராயிற்று.
21. அப்பொழுது தேவனுகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
22. தேவனுகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளே மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
23. அப்பொழுது ஆதாம். இவன் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனிஷனில் எடுக்கப்பட்டபடியினாலே "மனுஷி" எனப்படுவாள் என்றான்.
24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயி ருப்பார்கள்?
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து நீ இதைச் செய்தபடியால் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய் நீ உன் வயிற்றினுள் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்
15. உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார் நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
16.அவர் ஸ்திரியை நோக்கி நீ கர்ப்பவதியாருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன் வேதனையோட பிள்ளை பெறுவாய் உன் ஆசை உன் புருசனைப் பற்றியிருக்கும் அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
பின்பு அவர் ஆதாமை நோக்கி நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோட அதன் பலனைப் புசிப்பாய்
மேற் கூறிய வார்த்தைகள் பைபிளிருந்து எடுக்கப்பட்டவை நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான வார்த்தைகளுமாகும்.
இவ்வாத்தைகள் தெரிவிக்கும் கருத்து என்ன?
1.கடவுளின் படைப்பு வரிசையில் மிருகங்களுக்கு கீழே பெண் வருகிறாள்
2."பெண்" படைப்புக்கான தேவை- ஆணிற்கு ஒரு துணை தேவை என்பது தான் அதில்லாமல் பெண் படைப்புக்கான தேவை வேறு எதுவுமில்லை பெண் இல்லாமலேயே உலகம் படைப்பில் முழுமை பெற்றே இருந்தது. கடவுளின் இரண்டாம் பட்ச சிந்தனையே பெண்ணின் படைப்பு.
3.பெண் உடலியல் ரீதியாக ஆணின் ஒரு விலா எலும்புக்குச் சமமானவள்
4. பாவத்தைக் தூண்டுபவளாக பெண்ணே பணியாற்றிருக்கிறாள்.
அதனால் ஆண்டவனால் சபிக்கப்பட்டு ஆணுக்கு இல்லாத மகப்பேற்று சுமையை விதிக்கப்பட்டிருக்கிறாள் அதாவது கர்ப்பம் பெண்ணுக்குக் கடவுளின் சாபமாகும். இதன் பின் மதத்துக்காக விரிவுரை மற்றும் விளக்கவுரை எழுதியிருக்கும் புனிதத் துறவிகள் இன்னும் மோசமாகச் சென்று மகப்பேறு, மாதவிடாய், குழந்தை வளர்ப்பு, பெண் அடிமையாய் இருக்க வேண்டியது, முக்காடிட்டுக் கொள்ள வேண்டியது இவையெல் லாமே கடவுளின் சாபங்கள் தான் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.
இன்று வரையிலும் கூட யூதர்கள் தங்களுடைய அன்றாட பிரார்த்தனையில் தங்களை பெண்ணாக படைக்காதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
மகப்பேறு வலியைக் குறைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள் கூட ரோமன் கத்தோலிக்க மதகுருமார்களிடம் மோதிதான் அறிவியல் அறிஞர்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இன்று நாம் கர்ப்பம், பெண்ணின் உரிமை என்பதை பல்லாண்டுகள் போராட்டத்துக்குப் பின் பேசத் துவங்கியுள்ளோம். ஆனால் நம் தோள்களில் இந்த போராட்டத்தை விதித்திருப்பது இந்த மதம் தான் என்பதை நாம் அடையாளம் காண்பது அவசியம் அல்லவா??
5. மனித இன வீழ்ச்சிக்குக் காரணமாகி மனித இனத்துக்கு மரணத்தை கொண்டு வந்தவள் பெண். ஆக படைப்பு பற்றிய கோட்பாட்டில் கிறிஸ்த்துவ மதம் எவ்வளவு தூரம் பெண்ணை இழிவுபடுத்தியிருக்கிறது என்பதை நமது வார்த்தைகளில் அதிகம் கூற வேண்டிய தேவையில்லை. இது தவிர மனித இனம் முழுமையுமே கடவுளால் சபிக்கப்பட்டிருக்கிறது. எனவே மனிதர்கள் பாவிகள் பிறக்கும் போதே பாவவிமோசனம் பெறுவதே அவர்களின் வாழ்க்கையின் இலக்கு அதற்கு தேவாலயங்கள் இறைத்தூதர்கள் இதை விட மனித இனத்தின் மீது வேறென்ன கொடுமை இனிமேல் நிகழத்தப்பட்டு விட முடியும்?
தன்மானமுள்ள எந்தப் பெண்ணாவது இப்படியாகப் படைக்கப்பட்டிருக்கிற ஒரு கடவுளை அந்தக் கடவுளின் பேரால் புனையப்பட்டிருக்கிற மத நிறுவனத்தை ஏற்றுக் கொள்வாளா?? ஆனால் என்ன சோகம் மெழுகுவர்த்தியைக் கொளுத்திக் கொண்டு முக்காடிட்ட தலைகளாய் எத்தனை பெண்கள் தேவாலயங்களின் வாசல்களில்?? மதத்தின் முதல் பலி அறிவார்ந்த உணர்வெழுச்சிதான். தேவனின் வார்த்தைகளுக்கெதிராய் சிந்திப்பது பாவம் என்று பல நூற்றாண்டுகளாக இவர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்து மதம்
இந்து மதத்தில் கிறிஸ்த்துவ மதத்தில் இருப்பது போல உலகம் படைக்கப்பட்டது குறித்தான வருணணைகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது. அம்மதத்தைப் பொறுத்த வரை உலகம் இருந்து கொண்டிருக்கிறது பிரளயங்களும் அழிவும் வந்திருக்கிறது ஆனாலும் உலகம் இருக்கிறது இனியும் இருக்கும் இந்த அனுமானத்தின் மீதே அதன் வேதங்கள் பேசுகின்றன. எனவே அம்மதத்தைப் பொறுத்தவரை பெண்கள் என்னவாக சித்தரிக்கப்பட்டார்கள் அவர்களுக்கான வாழ்க்கை விதிகள் எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை வைத்தே அம்மதத்தை நம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
இஸ்லாம் மதம்
ஆண், பெண் படைப்பு பற்றிய கோட்பாட்டில் இஸ்லாம் கிறிஸ்த்துவத்திலிருந்து மாறுபட்டதல்ல கிறஸ்த்துவத்தின் மீது வைத்த விமர்சனங்கள் இதற்கும் பொருந்தும் எனக் கொள்வோம். ஆனால் சபிக்கப்பட்ட இடத்தில் வேறுபாடு வருகிறது. இஸ்லாம் பெண்ணை பாவம் செய்யத் தூண்டியவளாக நிறுத்தவில்லை. மாறாக அப்பாவத்தில் ஆண், பெண் இருவரையும் ஒரேவிதமாகப் பார்க்கிறது. தத்துவார்த்த ரீதியில் இது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு தான் ஆனால் நடைமுறையில் சாபத்தைத் தந்திருக்கும் கிறிஸ்த்துவ மதத்திலிருந்து வெளியே வந்திருக்கும் பெண்களை விட மோசமான நிலையில் சாபத்தைத் தராத இஸ்லாமிலிருந்து பெண் விடுதலையடைவது இடர் நிநைததாக இருப்பதை என்னவென்று சொல்வது?
உரிமைகளும் கடமைகளும்
இனி அடுத்து இம்மதங்களில் பெண்களுக்கான உரிமைகளும் கடமைகளும் எவ்வாறு வகுக்கப்பட்nடிருக்கின்றன என பார்ப்போம்.
இந்து மதம்
ஒரு பிரிவு அல்லது இனத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கு அந்த அமைப்பு எந்த இடத்தை அளித்திருக்கிறதோ அதிலிருந்து எழுபவையாகும். கிறிஸ்த்துவ மற்றும் இஸ்லாம் மதத்தில் படைப்பு பற்றிய கோட்பாட்டிலேயே பெண்ணின் நிலை பற்றிய இந்த இருத்தல் நமக்கு புரிந்து விடுகிறது. ஆனால் இந்து மதத்தில் படைத்தல் பற்றிய வருணணைகள் ஆதாரபூர்வமாக இல்லையென்பதால் இந்த இருத்தலை நாம் அதன் இலக்கிய இதிகாசங்களிலிருந்து தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். முக்கியமாக மகாபாரதம், மனுநீதி, இராமாயணம் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரேயொரு சிரமம் அனைத்தையும் எடுத்து வைக்க நேரமும் இடமும் அனுமதி அளிக்காது என்பது தான.; எனவே சான்றுக்கு சில அடிப்படையானவற்றை மட்டும் எடுத்துப் பார்ப்போம்.
மகாபாரதம்
எத்தனையோ அந்நிய படையெடுப்புகளுக்கான பின்னரும், இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாததற்குக் காரணம் அது இந்துப் பெண்களின் தூய்மையின் (கற்பு) மீது கட்டப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள் இந்துத்துவ மதவாதிகள். இதிலிருந்து நமக்கு ஏன் கற்:பெனும் விலங்கு பெண்ணுக்கு மாட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு பதில் கிடைத்து விடுகிறது. இப்படியாக தனது மதத்தையும் அது தாங்கி நிற்கும் ஆணாதிக்க சமூகத்தையும், சமூக வளர்ச்சிகளினுடாக பாதிப்பின்றி தொடர்ந்து எடுத்துவர வேண்டுமானால் பெண்ணை கற்புடன் வைத்து நிர்வகிக்க வேண்டிய அவசியம் இந்து மதத்திற்கு இருந்திருக்கிறது, இருந்து வருகிறது, என்பதையும் இந்த வாhத்தைகள் தெளிவாக நமக்குப் புரிய வைக்கின்றன.
நாம் இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே மதம் என்பது புரோகித கூட்டங்களின் சுயநலத் திட்டம் தான் என்பதை எடுத்துரைத்திருந்தோம். உலகில் ஒரு மதம் மற்ற மதத்தை எதிரியாகப் பார்க்கிற வரலாறு அனைவருக்கும் எளிதாகப் புரிகின்ற ஒன்று. ஆனால் ஒரு மதமானது முதலில் பலி கொள்வது தனது மதத்து மக்களின் சுதந்திர சிந்தனைகளையும் தனிமனித உரிமைகளையும் தான் என்பதை புரிந்து கொள்ள நமக்கு ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் தேவைப்படுகிறது.
ஓவ்வொரு மதமும் முதன்மையாக அம்மதத்தின் புரோகித வகுப்பின் நலனுக்காக அம்மதத்தின் ஏனைய மக்களின் வாழ்க்கையை திட்டமிடும் ஓர் அமைப்புதான். இந்தத் திட்டத்தில் மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் மாறுபடும் முக்கியமான இடம், அது பிறவியை அடிப்படையாகக் கொண்டு அதன் திட்டத்தை வகுத்ததும் பெண்ணின் கற்பை தனது மதத்தின் முக்கிய முகமாக தூக்கிப் பிடித்ததும் தான்.
ஆனால் இந்தக் கற்பானது இவர்கள் கூறுவது போல் இந்துவாகப் பிறந்த ஓர் பெண்ணின் (ஓர் இந்துப் பெண்ணாகதான் பிறக்க முடியும்) இயல்பாக இருக்கிறதா இல்லையா என்பதை அம்மதத்திலிருந்தே இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
நாரத ரிஷிக்கும் அப்சரஸக்குமிடையே பெண்களின் இயல்பு பிறப்பு மற்றும் தன்மைகள் குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடக்கிறது. நாரதர் பெண்ணின் இயல்பை நிலையை எடுத்து விளக்கும்படி அப்சரஸிடம் கேட்க அதற்கு பெண்ணாகிய நானே பெண்ணை இழித்துப் பேச வேண்டியிருக்கிறது. எனினும் அது தான் உண்மையாகும். என்று கூறி பெண் பிறவிலேயே இழிவானவள், எப்போதுமே காவல் மீறி தவறு செய்வதில் இச்சையுள்ளவள், என்ற பொருளில் நிறைய எடுத்துரைக்கிறாள். அவை அத்தனையையும் இக்கட்டுரையில் இட்டு நிரப்புவது சாத்தியமில்லை எனவே சாரத்தை மட்டும் விவாதிப்போம் அதன் சாரம்சம் இது தான்.
பெண் பிறவிலேயே இழிவானவள் எப்போதுமே திருப்தியுறாதவள் குறிப்பாக காம இச்சையில் ஓர் ஆணுடன் வாழ்வது அவள் இயல்பன்று. பிரம்மன் படைக்கும் போதே இந்த இழி குணங்களுடன் தான் அவளைப் படைத்தான் எனவே இந்த அம்சங்கள் அவளிடமிருந்து பிரிக்கமுடியாதவை..
மகாபாரதத்தில் மட்டுமல்ல, மனுநீதியில் பெண்ணைப்பற்றி வருகின்ற பல்வேறு சுலோகங்களின் அர்த்தமும் இவ்வாறே அமைவதுடன் அதனால் பெண் காவலில் வைக்கப்பட வேண்டியவள் என்று மிக அழுத்தமாக எடுத்துரைப்பதுடன் அந்த அடிப்படையிலேயே பெண் சிறுவயதில் தந்தைக்கும் இளவயதில் கணவனுக்கும் முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட வேண்டியவள் என்றும் விதித்திருக்கிறது.
ஆக இந்து மதம் என்ன சொல்கிறது பெண் பிறவியில் ஒழுக்கமில்லாதவள், கற்பில்லாதவள் அவள் கற்போடு இருக்க வேண்டும் என்றால் அவள் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும். நாம் குறிப்பிட்டிருக்கும் இந்த ஆதார நூல்கள் எவையும் ஆண் ஒரு பெண்ணோடு மட்டுமே தன் வாழ்நாளில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று விதி செய்த இலக்pயங்களோ, நீதி நூல்களோ அல்ல அப்படி இருக்க பெண்ணின் காம இச்சையைக் குறி வைத்து அதனை மையப்படுத்தி பெண்ணினம் முழுமையுமே தரந்தாழ்த்தி குறிப்பிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது. என்பது தான் நமக்கு எழும் வியப்புக்குரிய கேள்வியாகும்.
அந்தக் கோணத்திலிருந்து பார்க்கும் போது நமக்கு முன் சில ஆழமான உண்மைகள் விரிகின்றன. இந்து மதத்திற்கு பின்னால் நிற்கின்ற ஆண் மாபெரும் சுதந்திர வெளியில் நின்றிருந்த பெண்ணை இவனுக்கு சாதகமான குடும்ப அமைப்புக்குள் சிறைப்படுத்துகின்ற தனது சமூகக் கடமையை செய்ய வேண்டியவனாக நின்றிருக்கின்றான்.
இந்து மதத்தின் இந்தக் குரலானது அந்த சூத்திரதாரியான ஆண் தனது சக ஆண்களிடம் நடத்திய உரையாடலேயன்றி வேறல்ல. அவன் சொல்கிறான் இந்தப் பெண் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவள் அவள் காட்டும் அன்பின் பேரிலேயோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலேயும் நீ அவளை நம்பி உன் காவலை தளர்த்தி விடாதே… இது தான் இம் மதத்தின் செய்தியாகும். இது பெண்ணை அடிமை செய்யும் ஆணாதிக்கவாதிகளால் தனது சமூக ஆண்களுக்காக எழுதப்பட்டது.
ஆக இந்த வார்த்தைகள் முதலில் பெண்ணுக்காக எழுதப்பட்டவையல்ல இரண்டாவதாக பெண்ணை மிக மிக இழிவுபடுத்துபவை. மூன்றாவதாக பெண்ணை சிறை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை அன்றாடப் பணியாக ஆணுக்கு எடுத்துரைத்தவை. இவ்வாறு சிறைப்படுத்திய இந்த அமைப்பின் சமூக இலக்குகளாகத்தான் தனிச் சொத்துரிமையும் வாரிசுரிமையும் நமக்கு புலனாகின்றன. பெண்ணின் மீது எழுப்ப்பட்ட கற்புக் கோட்டை தான் தனிச்சொத்துரிமையும் ஆண்வழி வாரிசுரிமையும அதன் மீதான ஆண்வழி, அதன்பின் ஆணாதிக்க சமூகத்தையும் அரண் செய்து கட்டமைக்கிறது. பெண்ணின் உடல் சார்ந்த ஆளுமையையும் அவளின் பால்சார்ந்த பிறவி உரிமைகளையும் அடக்குவதற்கான கொடிய ஆயுதங்களாகத்தான் இம்மதத்தின் ஒவ்வொரு வரியும் நமக்கு அறிமுகமாகின்றன. வேதங்களில் அவர்கள் (பெண்கள்)வாழும் பொய்கள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது அவர்களுக்கென்று வேதங்கள் கிடையாது. அதற்கான தகுதி அவர்களுக்கு கிடையாது. எனவே வேதத்தின் படி அவர்களுக்கென்று தனிக் கடமைகள் கிடையாது. அவர்களின் ஒரே வாழ்க்கைக் கடன் கணவனைச் சார்ந்து இருப்பது தான். பதிவிரதா தர்மா- இதுமட்டுமே பெண்ணிற்கான ஒரே தர்மம். இதற்குப் பிறகும் உரிமைகளைப் பற்றி பேசுகிற தைரியம் யாருக்கும் வராது என்று கருதுகிறோம்.
எனவே மேற்கூறியவற்றிலிருந்து பெண்ணிற்கான கடமையே இந்து மதத்தைப் பொறுத்தவரையில் கணவனுக்காக வாழ்வது தான் அவளுக்குக் கணவன் தான் தெய்வம். அதில் எழுதப்பட்டிருக்கும் அத்தனை ஆயிரம் வார்த்தைகளும் இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றன. இந்து இதிகாசங்களில் பெண் கதாபாத்திரங்கள் வாழ்ந்து காட்டியிருக்கும் நெறிகள் எதுவும் அந்த கதாபாத்திரங்களின் விருப்பத் தேர்வு அல்ல மாறாக அவர்களுக்கு வேதங்கள் விதித்த வாழ்க்கை தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நளாயினி குஷ்ட ரோகியாகிய தனது கணவனை சுமந்து கொண்டு தாசி இல்லத்துக்குச் சென்றாள் என்பது கதை. இதில் நளாயினியின் தியாகமென்று எதுவுமில்லை. அவள் அப்படி மட்டுமே செய்ய முடியும். ஏனெனில் கணவனைத் திருப்திப்படுத்தாத பெண்ணுக்கு மோட்சத்தில் இடமில்லை.
மகாபாராதத்தில் அனுசாசனபர்வம் என்ற உரை பெண்ணின் கடமைகளை விவரிக்கிறது. அது மகாதேவனின் கூற்று என்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது. கணவனுக்கு எப்படி பணிவிடைகள் செய்வது எனபது தவிர அதில் வோறொன்றும் இல்லை. அது கூறுவதைக் கேளுங்கள்.
கணவனைத் திருப்திப் படுத்தாத பெண்ணுக்கு மோட்சத்தில் இடமில்லை. அந்தக் கணவன் மிகவும் ஏழையாக இருந்தாலோ அல்லது கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தாலோ எதிரிகளின் பிடியில் மாட்டியிருந்தாலோ அல்லது ர் பிராமணனின் சாபத்திற்கு ஆளாகியிருந்தாலோ அது விதியின் செயலே என்று உணர்ந்து அந்தக் கணவன் என்ன தகாத காரியத்தைக் செய்யச் சொல்லி கேட்டாலும் அதனால் உயிருக்கே ஆபத்து வரும் எனினும் மனைவியாகிய பெண் எவ்விதத் தயக்கமுமின்றி அதனைச் செய்து அவனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.
பெண் தெய்வங்களையும் நாம் வணங்குகிறோமே… அவ்வாறிருக்க பெண்ணுக்கு மதத்தில் பெருமையளிக்கப்படவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்று கேட்கப்படலாம். இந்த வேதங்களில் இதிகாசங்களின் இந்த வெளிப்படையாகத் தெரியும் குருரமான முகத்தைத் தவிர மென்மையான வேடமணிந்து இன்னொரு முகம் இருக்கிறது. வேதங்களில் பெண் உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக, அதனை வைத்தே சிலர் வாதங்கள் எழுப்புகிறார்கள். அந்த முகம் என்ன சொல்கிறது என்றும் பார்த்தும் விடுவோம். பெண் எப்போதும் வணக்கத்துக்குரியவள் அவளை எப்போதும் பாசத்துடனும் பரிவுடனும் நடத்த வேண்டும்.
மகாபாரதம் - அனுசாசனபர்வம்...
எங்கே பெண் கௌரவிக்கப்படுகிறாளோ அங்கே கடவுள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கே பெண் கௌரவிக்கப்படவில்லையோ அங்கே எந்தப் புனிதமான சடங்கினாலும் எந்த பயனுமில்லை.
மனுநீதி...
இது போன்ற சில வாசகங்களை எடுத்துக்காட்டி இந்து மதம் பெண்ணுக்கு உயர்வான இடமளித்திருப்பதாக சிலர் வாதிடுகிறார்கள். இதில் அடிப்படையான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் ஆண்களை நன்றாக வைத்துக் கொள்ளச் சொல்லி எந்த மதமும் கேட்கவில்லை. ஆனால் எல்லா மதங்களும் பெண்களை நன்றாக வைத்துக்கொள்ளும்படி கேட்கின்றன. இதன் பொருள் என்ன மதங்கள் பெண்களிடம் பேசவில்லை ஆண்களிடம் பேசுகின்றன. அதனால் தான் நாம் கேட்கிறோம் நமக்காக எழுதப்படாத மதம் நமக்கு எதுக்கு. சரி இவ்வாறு கனிவு காட்டச் சொல்லி கேட்கும் வார்த்தைகளெல்லாம் பெண்ணின் தன்மை, இயல்பு அவள் காவலில் எப்போதுமே வைத்திருக்கப்பட வேண்டிய அவசியம் இவற்றை யெல்லாம் மறுத்தோ அவற்றிகெல்லாம் மாற்றாகவோ சொல்லப்படவில்லை. மாறாக அவற்றின் பின்னிணைப்பாக நாம் வீட்டில் வைத்து நம்முடைய தேவைகளுக்காக வளர்க்கின்ற மிருகங்களை அவற்றின் இயற்கையான முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்காக அவற்றை நடத்த வேண்டிய விதம் குறித்து போதிக்கப்படுகின்ற அதே பாணியில் தான் பெண்ணை கனிவாக நடத்தச் சொல்லி அம்மதம் நமக்கு அறிவுறுத்துகிறது.
நாம் வளர்க்கிற மிருகத்துக்கு பரிவு காட்டாவிட்டால் அது இறந்து விடும் அது நட்டமில்லையா வளர்த்தவருக்கு இந்த பரிவு தேவை தானா பெண்ணுக்கு…?
முக்கியமாகத் தாயாக கௌரவிக்கப்படுகிறாள் பெண் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. மேலைநாட்டு பெண்கள் நிலையுடன் நமது பெண்களின் நிலையை ஒப்பிட்டு பேசும் மதவாதிகள் அதில் பெரும் புளகாங்கிதத்தை அடைவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலைநாட்டு பெண்களிடம் மனைவி என்ற பாத்திரம் தான் முதன்மை வகிக்கிறது. ஆனால் நாம் தாயை முதன்மைப்படுத்தி சமூகத்தை வகுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் தாய் என்ற பாத்திரமானது மனைவி என்ற சமூக வடிவத்தின் ஆன்மீக வடிவம் தான் என்பதை நாம் முதலில் பரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் கடமைகளை உள்ளடக்கி அதன் மேல் அதின் தொடர்ச்சியாக நிற்பது தான் தாய் என்ற வடிவம். மனைவி தாய் இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். இதில் ஒன்றை மறுத்து அடுத்ததில் நாம் மயங்கி நிற்பதில் அர்த்தமேதுமில்லை. மனைவி என்ற பாத்திரத்தின் மீது கட்டாய பணிவிடையும் சுய மறுப்பும் திணிக்கப்பட்டிருக்கிறது என்றால் தாய் என்ற பாத்திரத்தின் வாயிலாக தியாகம் பெண்ணின் மீது கடமையாக ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த பாத்திரங்களுக்குள் எல்லாம் பெண் மட்டும் சிறை வைக்கப்படவில்லை. அதற்கெல்லாம் மேலாக அன்பு, காதல், தாய்மை, பரிவு, பாசம் என்ற அனைத்து உணர்வுகளும் கடமைகளாக்கப் பட்ட காரணத்தினாலேயே அவை படுகொலைக்களாகி விட்டன. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மாதா, குரு பிதா, தெய்வம் என்ற வரிசைப்படுத்தலில் ஆறுதல் கிடைக்கலாம் ஆனால் அந்த ஆறுதல் உண்மையை மறைத்துத் திரையிடப்படுகிறது. என்பதை நாம் உணரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நாகர் கோவிலைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர் காமராசர் ஒரு முறை குறிப்பிட்டார் நமது நாட்டில் பெண்ணுக்குக் குழந்தைப் பருவமே கிடையாது. அவளை சிறு வயதிலேயே அம்மா என்று அடையாளப்படுத்தி விடுகிறார்கள் என்று. தாயை முதன்மைப்படுத்தியதன் அடிப்படை சூட்சுமமே பெண்ணுக்கு வேறு ரோல் மாடலே அதாவது பங்களிப்பே இல்லாமல் செய்ததுதான்.
(கட்டுரையை சுருக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக நான் இக்கருத்துக்களை கோடி காட்டி விட்டு மட்டும் செல்கிறேன்.)
எனவே பெண் தெய்வங்கள் தாயை மனைவியை செல்வத்தைக் கல்வியைத் தருகின்ற … அதாவது யாருக்கு ஆணுக்கு தருகின்ற குறியீடுகள்தானே தவிர பெண்ணை சமூகத்தின் தலைவியாக உயர்த்துபவை அல்ல என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.…
சிறுவயதிலிருந்து ஆணுக்குக் கட்டுபட்டு அனைத்து அடிமை விதிகளையும் ஏற்று நடக்கின்ற ஒரு பெண் தான் இந்த ஆணின் வழிபாட்டுக்குரிய தாயாக பரிணமிக்க முடியும். அவன் அந்த தாயைத்தான் வழிபடுகிறானே தவிர பெண்ணையல்ல…
மேலும் ஒன்றை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். மேற் கூறியவையெல்லாம் இந்து மதத்தின் காலாவதியாகிவிட்ட கருத்துக்கள் அல்ல. இந்து மதம் என்ற ஒன்று இருக்கும் வரை இந்தக் கருத்துக்களை புதுப்பிக்கும் பணியை அவர்களில் யாராவது செய்து கொண்டுதானிருப்பார்கள்.பெண்கள் வேலைக்கு போவதை எதிர்த்து சங்கராச்சாரியார் விட்ட அறிக்கை பற்றி நமக்கெல்லாம் தெரியும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு கூட சுவாமி சிவானந்தா என்ற சாமியார் கூறியிருக்கிறார். பெண்கள் இனிமேலும் ஆண்கள் உலகத்தில் புகுந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும் அந்த ஆண்கள் பெண்களின் வேலையை செய்வதும் தகாது. அவர்கள் (பெண்கள்)வீடுகளிலிருந்து வெளியே வந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக பயங்கரமானதாக இருக்கும்.
இந்து மதத்தின் குரூர முகத்தை மறைத்துத் திரையிட்டு மென்மைப்படுத்திக் கொடுத்திருக்கும் சாமியார்களில் முக்கியமாக விவேகானந்தரைக் கூறலாம். அவர் பெண்ணைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கும் வார்த்தைகளையும் நான் ஓரளவு படித்துப் பார்த்தேன். எந்த விதத்திலும் அவர் இந்து மதம் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாத்திரப் பங்களிப்புக்களை மாற்றி விடவில்லை. வார்த்தைகளைத் தான் மாற்றியிருக்கிறார். இதிலேயே நமக்கு உடன்பாடில்லை. இருந்த போதிலும் அதனைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாமென்றால் அறிவார்ந்த இன்னொரு கேள்வி நமக்கு எழுகிறது. அவ்வாறு பெண்ணைப் பெருமைபடுத்தி பேச முனைந்தவர் நாம் இக்கட்டுரையில் எடுத்தெழுதியிருக்கும் பெண்ணை இழிவுபடுத்தியிருக்கும் வேத உரைகளையும் மகாபாராத உரைகளையும் மனுநீதி சுலோகங்களையும் மறுத்து விட்டல்லவா வேறு வார்த்தைகளை எழுத வேண்டும். அது தானே நேர்மை
இவர்கள் தர்மத்தின் பல இடங்களில் விலங்குகளிலும் கேவலமாக அல்லவா பெண் குறிப்பிடப்பட்டிருக்கிறாள். ஏன் இன்று இந்து மதத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் அதில் மனித இனத்துக்கு தேவையான மகோன்னதங்கள் ஒளிந்திருக்கிறது என்று கூறுபவர்கள் அதிலிருக்கும் இந்த இழிவான பக்கங்களை இவர்களே நீக்கி விட்டதாக ஓர் மதரீதியான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடத் தயாராக இருக்கிறார்களா?
எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து விட்டு இந்த வேதங்களைப் படிக்க பெண்களுக்கு (சூத்திரர்களுக்கு) தகுதியில்லை என்றும் விதி செய்து வைத்திருக்கிற அயோக்கியத்தனத்துக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு என்ன பெருமையைப் பற்றி வேண்டுமானாலும் இவர்கள் பேசட்டும்.
நன்றி www.dravidar.org
No comments:
Post a Comment